எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்றவுடன், உடனே கேட் எழுதி ஐ.ஐ.எம் -ல் சேர்ந்தால்தான் முன்னேறலாம் என்றில்லை. எம்.பி.ஏ. படிக்க ஐ.ஐ.எம் -கள்தான் சிறந்த கல்வி நிறுவனங்கள் என்றில்லை. அதேபோல், CAT தேர்வுதான் ஒரே வழி என்றில்லை. அதற்கும் வேறு வழிகள் உள்ளன. மராட்டிய மாநிலத்திலுள்ள JBIMS என்ற கல்வி நிறுவனம், வணிகப் படிப்பை மேற்கொள்ள நாட்டிலுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்று. மராட்டிய அரசு நடத்தும் மாநில நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இக்கல்வி நிறுவனம் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறது. இந்நிறுவனத்தின் ஏறக்குறைய 85% இடங்கள் மராட்டிய மாநிலத்தின் மாணவர்களுக்கானது.
தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில புதிய ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்களைவிட, TISS, XLRI, FMS மற்றும் IIFT போன்றவை சிறப்பான வசதிகளைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள். எனவே, இதுபோன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் இடம்பெற, என்னமாதிரியான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேற்கூறியவற்றில், TISS கல்வி நிறுவனம் அதற்கான சொந்த நுழைவுத்தேர்வை நடத்திக் கொள்கிறது. XLRI மாணவர்களை சேர்க்க GMAT மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வதோடு, தனது சொந்த சேர்க்கைத் தேர்வையும் நடத்துகிறது. மற்ற கல்வி நிறுவனங்கள், MAT, ATMA மற்றும் GMAT போன்ற தேர்வுகளின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கிறது. பல மாநிலங்கள், தங்கள் எல்லைக்குள் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர, தனி நுழைவுத்தேர்வுகளை நடத்துகின்றன. தற்போது சிலவகையான நுழைவுத் தேர்வுகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளலாம்.
AIMA - MAT(Management Aptitude Test) அனைத்திந்திய மேலாண்மை அசோசியேஷனின்(AIMA) பிரிவான, மேலாண்மை சேவைகளுக்கான மையம்(CMS) இந்த தேர்வை நடத்துகிறது. வருடத்திற்கு 4முறை(பிப்ரவரி, மே, செப்டம்பர் மற்றும் டிசம்பர்) இந்த தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வின் மதிப்பெண்கள் 1 வருடம் வரை ஏற்றுக்கொள்ளப்படும். பல மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இத்தேர்வை ஏற்றுக்கொள்கின்றன. இதற்கான பதிவு விண்ணப்பம் ரூ.1200 என்ற விலையில் கிடைக்கிறது.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். வேலை அனுபவம் தேவையில்லை.
தேர்வுமுறை கேள்வித்தாள் Objective முறையிலானது. ஒரு மாணவர் இத்தேர்வை பேப்பர் முறையிலும் எழுதலாம் மற்றும் ஆன்லைனிலும் எழுதலாம். ஆனால், இரண்டுக்கும் மொத்தம் 2.5 மணி நேரங்கள்தான். விரிவான விபரம் அறிய www.aima-ind.org என்ற இணையதளம் செல்க.
ATMA - AIMS Test for Management Admissions இத்தேர்வானது, MBA, MCA மற்றும் PGDM போன்ற படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க நடத்தப்படுகிறது. இதை, மத்திய மனிதவள அமைச்சம் அங்கீகரித்துள்ளது. இத்தேர்வு மதிப்பெண்கள் ஒரு வருடம் மட்டுமே செல்லுபடியாகும். இத்தேர்வு ஆன்லைனிலும் நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையான காலகட்டத்தில், தேவைக்கேற்ப, 15 நாட்களுக்கு ஒருமுறை, எத்தனைமுறை வேண்டுமானாலும் இத்தேர்வு நடத்தப்படும். இதன் விண்ணப்ப படிவம் ரூ.950.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை ஆறு பிரிவுகளில் 180 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி காலஅளவு உண்டு. தேர்வின் மொத்த நேரம் 3 மணிநேரங்கள். தவறான விடைகளுக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். இதன் முழுவிபரம் அறிய www.atmaonline.in என்ற இணையதளம் செல்க.
ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வு(ICET) ஆந்திராவிலுள்ள அனைத்து பல்கலைகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் MBA மற்றும் MCA படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு வருடம் ஒரு முறை நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழு விபரம் அறிய www.apsche.org என்ற இணையதளம் செல்க. தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு(TANCET) தமிழக அரசின் பொருட்டு, மாணவர்கள் தமிழக கல்வி நிறுவனங்களில் MBA மற்றும் MCA போன்ற படிப்புகளில் சேர, அண்ணா பல்கலைக்கழகம் இத்தேர்வை நடத்துகிறது.
தகுதிகள் +2 முடித்து, பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் சரி, 10ம் வகுப்பு முடித்து, டிப்ளமோ முடித்து, அதன்பிறகு பட்டம் பெற்றிருந்தாலும் சரி, BE, B.Tech, B.Arch அல்லது B.Pharm போன்ற படிப்புகளை முடித்திருந்தாலும் சரி. விரிவான விபரம் அறிய www.annauniv.edu என்ற இணையதளம் செல்க.
MAH - MBA/MMS CET(Maharashtra MBA Common Entrance Test) மராட்டிய மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால், MBA/MMS/PGDBM மற்றும் PGDM போன்ற படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, பல்கலை நிர்வாகத்தின் கீழுள்ள மற்றும் அம்மாநிலத்தின் அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க இத்தேர்வு நடைபெறுகிறது.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில், குறைந்தது 50% மதிப்பெண்களுடன், இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை மொத்தம் 200 Objective முறை கேள்விகளோடு, 150 நிமிடங்கள் ஒதுக்கப்படும். நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. விரிவான விபரங்களுக்கு www.dte.org.in/mba என்ற இணையதளம் செல்க.IBSAT (IBS Aptitude Test) ICFAI குழுமத்தால், மேலாண்மை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, இந்தியாவின் பல பெருநகரங்கள் மற்றும் வணிக மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.1200.
தகுதி குறைந்தது 50% மதிப்பெண்களுடன், ஆங்கில வழியில் படித்த பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.தேர்வுமுறை மொத்தம் 2 மணிநேரம் காலஅளவாக ஒதுக்கப்படும். தேர்வர்களின் பலவித திறன்கள் சோதிக்கப்படும். விரிவான விபரம் அறிய www.ibsat.org என்ற வலைத்தளம் செல்க.
வெளிநாட்டு வணிகத்தின் இந்திய கல்வி நிறுவன தேர்வு(Indian Institute of Foreign Trade) சர்வதேச வணிகப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, எழுத்துத் தேர்வை IIFT நடத்துகிறது. தற்போது IIFT டெல்லியிலும், கொல்கத்தாவிலும் 2 வளாகங்களைக் கொண்டுள்ளது. மேலும், கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மற்றொரு வளாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாக IIFT திகழ்கிறது. நாட்டின் பல நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.1500. SC/ST மற்றும் PH மாணவர்களுக்கு மட்டும் ரூ.750.
தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வுமுறை இத்தேர்வு 2 மணி நேரங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற கட்டங்களுக்குப் பிறகே, இறுதித் தேர்வு நடைபெறும். விரிவான விபரம் அறிய www.iift.edu என்ற இணையதளம் செல்க.
NMAT (Narsee Monjee MAT) NMIMS என்ற மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கு, கடந்த 2003ம் ஆண்டு, UGC நிகர்நிலைப் பல்கலை அந்தஸ்தை அளித்தது. இக்கல்வி நிறுவனம் MBA Core, MBA Actuarial Science, MBA - Banking, MBA - Capital Market, MBA - HR, MBA - Pharmaceutical Management ஆகிய 2 வருட முழுநேரப் படிப்புகளை அதன் மும்பை வளாகத்திலும், PGDM படிப்பை பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வளாகத்திலும் வழங்கி வருகிறது. 3 மாத காலகட்டத்தில், பல்வேறான தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரும்பும் மாணவர்கள் 2 முறை தேர்வை திரும்ப எழுதலாம். முடிவில், 3 சிறந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படும். இதன் விண்ணப்ப கட்டணம் ரூ.1650.
தகுதி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை Objective முறையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். தேர்வு காலம் 2 மணி நேரங்கள். முழுவிபரம் அறிய www.nmims.edu என்ற இணையதளம் செல்க. SNAP (Symbiosis National Aptitude Test) சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலையின் கீழ் இருக்கும் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு நடத்துப்படுகிறது. ஆனால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்வி நிறுவனத்திற்கென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் விலை ரூ.1650. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் விண்ணப்பிக்கும்போது, ரூ.1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தகுதி ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுமுறை தேர்வுகாலம் மொத்தம் 2 மணிநேரங்கள். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 நெகடிவ் மதிப்பெண் வழங்கப்படும். முழுவிபரம் அறிய www.snaptest.org என்ற இணையதளம் செல்க.
XAT(Xavier Aptitude Test) இத்தேர்வை, சேவியர் அசோசியேஷன் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சார்பாக, XLRI - ஜாம்ஷெட்பூர் நடத்துகிறது. இத்தேர்வு மதிப்பெண்களை நாடு முழுவதும் சுமார் 77 கல்வி நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. இந்தியாவிலுள்ள 38 நகரங்களிலும், நாட்டிற்கு வெளியே 4 நகரங்களிலும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தகவல் விவரணம் மற்றும் விண்ணப்ப படிவம் ரூ.850 என்ற விலையில் கிடைக்கிறது.
தகுதி ஏதேனும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலையிலிருந்து இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.இத்தேர்வு குறித்து முழுவிபரம் அறிய www.xatonline.net.in என்ற தளம் செல்க.
No comments:
Post a Comment