விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் 57 ஆவது பிறந்த தினம் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. ராணுவம், போலீஸ் கெடுபிடி என அனைத்து வழிகளிலும் இலங்கை அரசு அடக்குமுறையை ஏவிவிட்ட போதும் மக்கள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்கள் தலைவரின் பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆலயங்களில் தலைவருக்கு நல்லாசி வேண்டியும் நீண்ட ஆயுளுடன் வாழவும் விசேட பூஜைகள் நடத்தினர். இந்த நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் மட்டுமன்றி கிராமப் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கருணா குழு, பிள்ளையான் குழு மற்றும் இலங்கை படையினரின் நடமாட்டத்திற்கு மத்தியிலும் மக்கள் வருவது வரட்டும் என்ற மனப்பான்மையுடன் பிரபாகரன் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் பிரபாகரன் எந்த அளவு நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாக இந்த கொண்டாட்டங்கள் அமைந்தன. அதேபோல இன்று மாவீரர் தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மாவீரர்களின் நினைவாக விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விரிவான அறிவிப்புகளுடன் இந்த மாவீரர் தினத்தைக் கொண்டாடினால் ராணுவம் கலைத்துவிடும் என்பதால், திடீரென பல இடங்களில் ஒரே நேரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலீஸ் தடை தமிழகத்தில் பல இடங்களில் பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாட சீமான், கொளத்தூர்மணி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. நாமக்கல்லில் சீமானின் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர் பேசினார்.
No comments:
Post a Comment