சர்க்கரை, இருதய நோயை குணப்படுத்தும் மருத்துவ குணமுள்ள கீரை வகைகளை, சாலூர் கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் பயிரிட்டு வருகின்றனர். சிவகங்கை அருகே சாலூர் கிராம ஊராட்சியின் கீழ் கீழ, மேல சாலூர், செவல்பட்டி, பாப்பாகுடி, பெருமாள்பட்டி, கொளுஞ்சிப்பட்டி உள்ளன. இங்குள்ள ஆயிரத்து 500 குடும்பத்தினரின் முக்கிய தொழில் விவசாயம். இரண்டாயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, மஞ்சள், பூ வகைகள் விளைகின்றன. இங்கு, நடக்கும் விவசாயத்தின் சிறப்பு, மருத்துவ குணமுள்ள கீரை வகைகளை விளைவிப்பது தான். இவை சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு உணவு, மருத்துவ தேவைக்காக அனுப்பப்படுகிறது.
வகைகள்: சிவப்பு, நாட்டு, வெள்ளை, பச்சை பொன்னாங்கன்னி, தண்டங்கீரை, பாலக்கீரை, காசினிக்கீரை, மணத்தக்காளி, சிறு கீரை, மஞ்சள் கரிசலாங்கன்னி, பருப்புகீரை, அரைக்கீரை, சக்கரவர்த்தி உட்பட 20க்கும் மேற்பட்ட வகையான கீரைகளை ஒரே கிராம விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
மருத்துவ குணம்: இக்கீரைகளை சாப்பிட்டால், இருதயத்தில் ரத்த ஓட்டம் சீராகும். காசினிக்கீரை சர்க்கரை, ரத்த கொதிப்பு நோயை தீர்க்கும். மணத்தக்காளி வயிற்றுப்புண் ஆற்றும். சிறுகீரை உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும். மஞ்சள் கரிசலாங்கன்னி சாப்பிட்டால், மஞ்சள் காமாலை வராது. இக்கீரை சாற்றை, தலையில் தேய்த்தால் முடி கொட்டாது. வழுக்கை தலையில் முடி வரும்.பொன்னாங்கன்னி உடல் சூட்டை தணிக்கும். விவசாய பணிக்கே ஆள் பற்றாக்குறை உள்ள நிலையில், லாபம் இல்லாவிட்டாலும் மருத்துவ குணமுள்ள கீரைகளை விளைவித்து, மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதை, சேவையாக கருதி இக்கிராம விவசாயிகள் பணியாற்றுகின்றனர்.
No comments:
Post a Comment