திருப்பதி கோவிலுக்கே பெரும் சவாலாக கிளம்பியது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில். அக்கோவிலில் பதுங்கிக்கிடக்கும் பல லட்சம் கோடி பொக்கிஷம் குறித்த தகவல் வெளியாகி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. திருவனந்தபுரத்தில் படு அமைதியாக காட்சி தரும் பத்மநாபசாமி கோவில் மீது கடந்த ஜூன் மாதத்திற்கு முன்பு வெளிச்சப் புள்ளி ஏதும் படாமலேயே இருந்து வந்தது. ஆனால் அங்குள்ள கோவிலில் உள்ள பாதாள ரகசிய அறைகளைத் திறந்து அதில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்யுமாறு ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாதத்தி்ல 27ம்தேதி பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு கோவிலின் ரேஞ்சே மாறிப் போய் விட்டது.
ஒவ்வொரு அறையாகத் திறக்கத் திறக்க மக்களுக்கு மூர்ச்சை வராத குறையாக வியப்பு மேலோங்கிப்போனது. காரணம், அந்த அளவுக்கு அங்கு குவிந்து கிடந்த வைடூரியம், வைரம், தங்கம், வெள்ளி நகைகளின் மலைக் குவியல்தான். பல லட்சம் கோடி அளவிலான நகைப் பொக்கிஷம் அந்த பாதாள அறைகளில் பதுங்கியிருந்த ரகசியம் அம்பலமானபோது அனைவருமே வியந்து போயினர்.
திருப்பதி கோவிலின் சொத்துக்களை விட இங்கு கிடைத்துள்ள நகைகளின் மதிப்பு அதிகம் என்ற தகவலும் அனைவரையும் வியப்படைய வைத்தது. தற்போது நகைககளின் உண்மையான மதிப்பு குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் வரலாறு காணாத மதிப்பு மிக்க பொக்கிஷம் இக்கோவிலில் உள்ளது மட்டும் உண்மை. இத்தனைக்கும் அங்குள்ள 6வது ரகசிய அறை இதுவரை திறக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment