திருப்பூர் மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஈங்கூர் செல்லும் சாலையில் “நந்து சிக்கன் அண்டு கேட்டரிங் பார்ம்ஸ்” என்ற பெயரில் இரண்டு நாற்காலிகள், ஒரே ஒரு மேசையுடன் கடந்த நவம்பர் 25 ம் தேதி ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இப்போது சந்தையில் அதிகமாக விற்கப்படும் நாட்டுக்கோழிகளை மொத்தமாக வளர்த்து கொடுக்கவும், கொப்பரை தேங்காய்களை உடைத்து பருப்பு எடுத்து கொடுக்கவும் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்தார்கள். விளம்பரத்தை பார்த்துவிட்டு வந்தவர்களிடம், நாங்கள் 1000 நட்டு கோழிக்குஞ்சுகள் கொடுப்போம். அதை வளர்க்க உங்கள் இடத்தில் ஒரு பண்ணையும் நாங்களே அமைத்து கொடுப்போம். கோழிக்கான தீவனம், மருந்து என எல்லாம் எங்களின் செலவு. தினமும் நீங்கள் தீவனமும், தண்ணீரும் மட்டும் கொழிக்கு போட்டால் மட்டும் போடும். வீட்டிலிருந்து கோழிகளை கவனித்துக்கொள்ள உங்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் கொடுக்கிறோம் என்று அறிக்கை விட்டார்கள். அடடே இது நல்ல இருக்குதே என்று வாயை பிளந்து கொண்டு “நீ” “நான்” என்று போட்டி போட்டுக்கொண்டு பலர் நாட்டுகோழி வளர்க்க முன் வந்தார்கள். முதலில், நீங்கள் 1.5 இலட்சம் முன்பணம் கட்டினால் தான் நாங்கள் பண்ணை அமைத்து கொடுக்கமுடியும், அதற்க்கு பிறகு தான் 1000 கோழிக்குஞ்சு வாங்கிகொண்டு வந்து உங்களுக்கு கொடுக்க முடியும் என்று கம்பெனியின் நிபந்தனையை சொல்லியுள்ளார்கள்.
கோழி பண்ணைக்கு “ஷெட்டு” போடவும், குஞ்சு வாங்கவே இந்த பணம் பத்தாது, ஒரு வேளை பணம் குடுக்காம இந்த கம்பெனிக்காரன் நம்மளை ஏமாத்தினாலும் நாம குடுத்த காசுக்கு “கோழியும்” “பண்ணையும்” மீதி இருந்தாலே போதும்” என்று கணக்கு போட்டு பார்த்துவிட்டு பலர் பணம் கட்டினார்கள். மாதம் 30 ஆயிரம் என்ற ஆசையில் சிலர், “எங்ககிட்ட பண்ணை அமைக்க நிலம் இல்லை” என்று சொல்லியுள்ளார்கள். உங்களுக்கு வேற “ப்ளான்” இருக்குது, பொள்ளாச்சியில் இருக்கும் எங்களின் பண்ணையில் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... அதனால, அங்கே விளையும் தேங்காய லாரியில எடுத்துகிட்டு வந்து உங்களுக்கு வாரம் 1000 கொப்பரை தேங்காய கொடுப்போம், அதை வாங்கிப்போய் நீங்க தேங்காய உடைச்சி காயவச்சு பருப்ப எங்ககிட்ட குடுத்தா போதும்” உங்களுக்கும் மாத மாதம் 30,000 ரூபாய் வீதம் சம்பளம் குடுப்போம். என்று ஒரு புது “பிளானை” அறிமுகம் செயதுள்ளார்கள்.
அடடே இதுவும் நல்லா இருக்கு.... என்று சில புத்திசாலிகள் இரண்டு “பிளானுக்கும்” சேர்த்து பணம் கட்டியுள்ளார்கள். பணம் கட்டிய 30 நாளுக்குள் உங்களின் இடத்தில் “ஷெட்டு” போட்டு “கோழிக்குஞ்சு” கொண்டு வந்து விட்டுவிடுவோம் என்று “வசூலை” துவங்கிய இந்த “டுபாகூர்” கம்பெனி நேற்று முன்தினம் இரவே... அதாவது, கம்பெனி துவங்கிய முப்பதாவது நாள் இரவே கதவை இழுத்து மூடிவிட்டு சென்னிமலையிலிருந்து கிளம்பி விட்டார்கள். இப்போது யாரிடம் போய் புகார் கொடுப்பது என்று பணம் கட்டிய மக்கள் தெருவில் நிற்கிறார்கள். தமிழனின் தலை எழுத்து, வருடம் ஒரு முறையாவது யாரிடமாவது எமாரவேண்டும் என்பது நம்மக்களின் தலைவிதி போலிருக்கிறது.கவனம்... உங்க ஊருக்கும்... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை “மொட்டையடிக்க” சிலர் வருவார்கள்.
No comments:
Post a Comment