கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தைப் போதுமான நிதி ஆதாரத்துடன் அமைத்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி, தேவைப்படும் அனைவருக்கும் உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது அறிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி வழங்கப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. மன்றம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் மாற்றம் உருவாகி மறுமலர்ச்சி ஏற்பட்டிட 03.12.1981ம் ஆண்டு உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக அறிவித்து ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்குச் செய்து வரும் உதவிகளை பத்தாண்டுச் செயல் திட்டமாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்திடக் கோரியது.
03.12.1995ல் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகள் தினத்தைக் கடைபிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் படிப்படியாக மாற்றுத் திறனாளிகளின் குறைகளை அறிந்து தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 16 லட்சத்து 85 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்று 2011ம் ஆண்டில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 22 லட்சம் பேர் என்று நம்பப்படுகிறது. இவர்களில் 7,886 பேருக்கு மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
எனவே, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டதைப் போன்று மாற்றுத் திறனாளிகளின் நல வாரியத்தைப் போதுமான நிதி ஆதாரத்துடன் அமைத்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறுவதற்கான கடுமையான விதிகளைத் தளர்த்தி, தேவைப்படும் அனைவருக்கும் உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்ய வேண்டும். மாநில அரசு தற்போது அறிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பணி உத்தரவு வழங்கப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளின் உரிமையைப் பாதுகாக்கின்ற விதத்தில் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அதேவேளையில் எதிர்காலத்தில் மாற்றுத் திறனாளிகள் உருவாகாமல் மனித சமுதாயத்தைக் கருவிலிருந்தே பாதுகாக்க வேண்டியது மத்திய- மாநில அரசுகளின் கடமையாகும்.ஜெபிக்கும் உதடுகளைக் காட்டிலும் சேவை செய்தவன் கரங்களே மகத்தானவை என்ற அன்னை தெரேசாவின் பொன்மொழிகளை மனதில் இருத்தி மாற்றுத் திறனாளிகளைச் சக மனிதர்களாக் கருதி அன்பு செலுத்த வேண்டியது நாகரீக சமுதாயத்தின் கடமை. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வசந்தம் உருவாகிட மதிமுக சார்பில் டிசம்பர் 3- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
No comments:
Post a Comment