|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 December, 2011

போட்டு தள்ளும் விஜயகுமார்!


சிறிது காலமாக பேசப்படாமல் இருந்த தமிழக ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயக்குமாரின் பெயர் மீண்டும் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது. வீரப்பன் உள்ளிட்ட பலரை வீழ்த்திப் புகழ் பெற்ற தமிழக முன்னாள் கூடுதல் டிஜிபியான விஜயக்குமார் தலைமையிலான சிஆர்பிஎப் படைதான் தற்போது மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வந்த மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியையும் வீழ்த்தியிருப்பதால் இந்த பரபரப்பு எழுந்துள்ளது. மேற்கு வங்கத்தை மையமாகக் கொண்டு அங்கும் சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாவோயிஸ்ட் நக்சலைட்களை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர் கிஷன்ஜி. பல காலமாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாக இருந்து வந்து பல்வேறு மாநில அரசுகளின் நிம்மதியைப் பறித்தவர் கிஷன்ஜி.

நேற்று மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதினாப்பூர் மாவட்டம் புரிசோல் வனப்பகுதியில் நடந்த கடும் சண்டையில் கிஷன்ஜி கொல்லப்பட்டதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. கிஷன்ஜியை வேட்டையாடியது சிஆர்பிஎப் படையினர் ஆவர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நடந்த சண்டைக்குப் பின்னர் கிஷன்ஜி கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு 9.30 மணியளவில் சிஆர்பிஎப் படையினருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. கடும் இருளில் வெறும் டார்ச் லைட் ஒளியுடன் சிஆர்பிஎப் வீரர்கள் முன்னேறிச் சென்று கிஷன்ஜி உள்ளிட்டோரை வேட்டையாடியுள்ளனர்.

சிஆர்பிஎப்பின் 'கோப்ரா' எனப்படும் அதிரடி படைப் பிரிவே இந்த சண்டையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் வனப்பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் தீவிரவாதிகளுடனும், நக்சலைட்களுடனும் போரிடுவது தொடர்பான சிறப்புப் பயிற்சியைப் பெற்றவர்கள் ஆவர். சிஆர்பிஎப்பின் 3 படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கடும் பயிற்சிகள் கொடுத்து இந்தத் தாக்குதலில் இறக்கியுள்ளனர். இந்தப் படையினரை பல்வேறு திட்டங்களை வகுத்து, நீண்ட கால கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல்கள் மூலம் 'ஸ்கெட்ச்' போட்டு கிஷன்ஜி மறைவிடத்தைக் கண்டுபிடித்து வீழ்த்தியுள்ளனர்.

உண்மையில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை பிற்பகலே தொடங்கியிருக்கிறது. அன்று நடந்த தாக்குதலிலிருந்து கிஷன்ஜி, சுசித்ரா மஹதோ மற்றும் பிற தலைவர்கள் தப்பியுள்ளனர். இருந்தாலும் விடாமல் சிஆர்பிஎப் படையினர் தங்களது முற்றுகையை மேலும் பலமாக்கி நெருக்கியுள்ளனர். இதனால்தான் அவர்களால் தப்ப முடியாமல் போய் விட்டது.

இருப்பினும் செவ்வாய்க்கிழமை தாக்குதலுக்குப் பின்னர் கிஷன்ஜி குறித்த தகவல் கிடைக்காததால், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு (சம்பவம் நடந்த இடத்திற்கு வெகு அருகேதான் ஜார்க்கண்ட் மாநில எல்லை வருகிறது) தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று உறுதியானதால், முற்றுகையை சிஆர்பிஎப் வீரர்கள் இறுக்கினர். இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎப் படையினருடன் வேறு படையினரும் ஈடுபட்டிருந்தாலும் கூட முக்கிய தாக்குதல் திட்டத்தை சிஆர்பிஎப்தான் வகுத்துள்ளது.

இங்குதான் கே.விஜயக்குமார் 'சீனு'க்கு வருகிறார். 'ஜங்கிள் வார்ஃபேர்' எனப்படும் வனப் பகுதி சண்டையில் கில்லாடி விஜயக்குமார். இதற்கு முன்பு எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவராக அவர் இருந்தபோது அவரது திறமை எல்லைப் புறத்தில் வெளிப்பட்டது. பின்னர் தமிழகத்தில் அதிரடிப்படைத் தலைவராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார். வீரப்பனை வேட்டையாடும் பொறுப்பு அவர் வசம் வந்தது. அதற்கு முன்பு வரை அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை உத்திகளை முற்றிலுமாக மாற்றியமைத்து கிடைக்கும் வரை தேடுவது என்ற புதிய உத்தியை அறிமுகப்படுத்தி வீரர்களை காட்டுக்குள் போக வைத்தார். மேலும் உளவுத் தகவல்களையும் பெருமளவில் பல்வேறு 'சோர்ஸ்கள்' மூலம் கறக்க ஆரம்பித்தார்.

அவரது திட்டமிடல் காரணமாகவே வீரப்பனை சுட்டு வீழ்த்த முடிந்தது அதிரடிப்படையால். 2003ம் ஆண்டு யாரும் எதிர்பாராத நேரத்தில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் தமிழக மக்களை மட்டுமல்லாமல் இந்திய மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல அதற்கு முன்பு சென்னையில் போலீஸ் கமிஷனராக இருந்தபோதும் விஜயக்குமாரின் வேட்டை பிரபலமானது. 2001ம் ஆண்டுஅவர் சென்னை கமிஷனராக நியமிக்கப்பட்டார். 23 மாதங்கள் இப்பதவியில் அவர் இருந்தார். இந்த காலகட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இவர் கமிஷனராக இருந்தபோதுதான் சென்னையில் 7 என்கவுண்டர்கள் நடந்தன.

பல கடுமையான தாதாக்களையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களையும் போட்டுத் தள்ளியது விஜயக்குமார் தலைமையிலான போலீஸ் படை. அதில் முக்கியமானவர்கள் அயோத்தியாகுப்பம் வீரமணி. சென்னை மக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வீரமணி. அவரை கடற்கரையில் வைத்து போட்டுத் தள்ளியது போலீஸ்.விஜயக்குமாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னையை விட்டு பல ரவுடிகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது மேற்கு வங்கத்தில் கிஷன்ஜி வீழ்த்தப்பட்ட சம்பவத்திலும் கூட விஜயக்குமாரின் முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...