ஏற்காட்டில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை கரிநாளுக்கு அடுத்து வரும் நாளில், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஏற்காடு மலையில் அமைந்துள்ள வெள்ளக் கடை கிராமத்தில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை, கரிநாளுக்கு அடுத்த நாள், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜையாக நடக்கும். இந்த பூஜையில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை மட்டுமே பங்கேற்க முடியும். ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகளை பூஜையின் போது, தாயுடன் வைத்து கொள்ளலாம். விசேஷ அம்மன் பூஜை நடக்கும் போது, வெள்ளக்கடையில் உள்ள ஆண்கள் அனைவரும், ஊரை விட்டு வெளியேறி விடுவர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் பூஜையில், அம்மனுக்கு பிடித்த கேழ்வரகு, பழம், பூ, தேங்காய் வைத்து படையல் செய்யப்படும். ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சென்று, பெண்கள் எல்லை தெய்வத்தை வழிபடுவர். அதன் பின், ஊர்வலமாக சென்று, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். இந்த விசேஷ பூஜை நடக்கும் நாளில், வெளியூரில் இருந்து உள்ளூருக்குள் எந்த நபரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக, வெள்ளக்கடையை சேர்ந்த ஆண்கள் ஊர் எல்லையில் கம்பு நட்டு, காவலுக்கு இருப்பர். புத்தாடை அணிந்து பூஜையில் ஈடுபடும் பெண்கள், கும்மி பாட்டு பாடியும், நடனமாடியும், அம்மனை வழிபடுவர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் வழிபாடு முடிந்ததும், பெண்கள் படையல் செய்த பதார்த்தங்களை தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். இந்த விசேஷ பூஜை முடிந்ததும், சிறுமி மூலம் ஊர் எல்லையில் காவலுக்கு இருக்கும் ஆண்களுக்கு, "சமிக்ஞை கொடுக்கப்படும். அதன் பின், ஊர் எல்லையில் இருக்கும் ஆண்கள் ஊருக்குள் வந்து, அம்மனை வழிபடுவர். வரும் பெங்கல் பண்டிகையையொட்டி பெண்களால் கொண்டாடப்படும் விசேஷ அம்மன் வழிபாடுக்கு தேவையான முன் ஏற்பாடுகளை, வெள்ளக்கடையை சேர்ந்த மக்கள் செய்து வருகின்றனர். சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பெண்கள் பங்கேற்கும் அம்மன் பூஜை சம்பந்தமாக, பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையில் வெள்ளக்கடை பெண்களால் நடத்தும் பூஜை, அரசு மற்றும் உளவுத்துறை கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால், அந்த ஊரை சேர்ந்த மக்கள் மனம் வருத்தம் அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். 2005ம் ஆண்டு, ஆர்.டி.ஓ.,வாக சேலத்தில் பணியாற்றி வந்த தட்சிணாமூர்த்தி தலைமையிலான பெண் வருவாய் அலுவலர்கள், வெள்ளக்கடையில் பெண்கள் நடத்தும் பூஜையை நேரடியாக கண்காணித்து, வீடியோ மூலம் பதிவு செய்து வெளிகாட்டினர். அதன்பின்னரே, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத பூஜை மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment