உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக திகழ்ந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரன் சொன்னதை வேதமாக தமிழ் மக்கள் ஏற்றுச் செயல்பட்டனர். கட்டுக்கோப்பான இயக்கமாகவும் அது செயல்பட்டது. அவர்கள் செய்த ஒரே தவறு, மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் அதே ரீதியில் சண்டையிட்டதே என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அதிகாரியும், ராஜீவ் காந்தியின் ஆலோசகராக செயல்பட்டவருமான ஜி.பார்த்தசாரதி. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மிகச் சிறந்த யோசனைகளைத் தந்த ஒரே வெளியுறவுத்துறை அதிகாரி என்ற பெயர் பெற்றவர் பார்த்தசாரதி. இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐஎப்எஸ் தேர்ச்சி பெற்று, வெளியுறவுத்துறைக்கு வந்தவர் இவர்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் ஜி.பார்த்தசாரதி. அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம் கடுமையான இயக்கமாக இருந்தாலும உலகின் மிக வலிமையான சுதந்திரப் போராட்ட இயக்கமாக செயல்பட்டது என்பதில் சந்தேகமில்லை. தனது குறிக்கோளுக்காக அது தீவிரமாக செயல்பட்டது. உத்வேகம் கொண்ட கள வீரர்களைக் கொண்டிருந்த அமைப்பாக விளங்கியது. அந்த அமைப்பின் தலைவர் சொன்னதை சட்டமாக, வேதமாக ஏற்றுச் செயல்பட்ட கள வீரர்கள் நிறைந்திருந்தனர். தங்களது உயிரைக் கூட இரண்டாம்பட்சமாக நினைத்த அவர்கள் பிரபாகரன் சொன்னதற்கே முதல் முக்கியத்துவம் கொடுத்தனர்.
கொரில்லா இயக்கமாக செயல்பட்ட விடுதலைப் புலிகள், மரபு ரீதியான போருக்கும் மாற முடிந்தது. இரு வகையான போர் முறைகளிலும் விடுதலைப் புலிகள் சிறப்பாகவே செயல்பட்டனர். ஆனால் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால் மரபு ரீதியான ஒரு ராணுவத்துடன் மரபு ரீதியாகவே மோதியதுதான் (அதாவது, கொரில்லா போர் முறையை தவிர்த்து). அதுதான் அவர்களது வீழ்ச்சிக்குக் காரணம். இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நடந்த விதிமீறல்களை இந்தியா கண்டிப்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. அப்படி ஒரு நிலை வந்தால், ஐரோப்பிய நாடுகள் நமக்கு ஆதரவு தரலாம், அமெரிக்கா ஸ்திரமான முடிவெடுக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இஸ்லாமிய நாடுகளும், சீனாவும் நமக்கு எதிராக திரும்பும்.
நான் ராஜீவ் காந்தியிடம், அவரது ஆலோசகராக இருந்தபோது அப்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரை தொடர்பு கொண்டு பேசினேன். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நான் பேசியபோது, எம்.ஜி.ஆர். அந்த உடல் நலிவிலும் கூட தமிழகத்தில் நடந்து வந்த அத்தனை நிகழ்வுகளையும் தனது விரல் நுனியில் வைத்திருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டேன். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று என்னிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.
இலங்கையில் தற்போது தமிழர்களின் பொருளாதார நிலை நிச்சயம் சரியாக இல்லை. அவர்களுக்கு இந்தியா பெருமளவில் உதவ வேண்டும். இதற்காக தனது கொள்கைகளை அது பெரிய அளவில் மறு பரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவின் உதவி அவசியம்.
தான் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற சர்வதேச சமுதாயத்துடன் இணைந்து இந்தியா நெருக்குதல் அளிக்க வேண்டும். அதேசமயம், பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் மீண்டெழ வேண்டியதும் அவசியமாகும்.வட கிழக்கு மாகாணங்களில் பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க வேண்டும். நீர்ப்பாசனத்தை மேம்படுத்த உதவ வேண்டும். இதை முதலில் செய்ய இந்தியா முயல வேண்டும். இந்திய பொருளாதார சந்தையின் விரிவாக்கமாக நாம் இலங்கையின் முன்னேற்றத்தைப் பார்க்க வேண்டும் என்றார் பார்த்தசாரதி.
No comments:
Post a Comment