ஓசூர் மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர் கோவிலைக் கட்டியது சோழ மன்னரா? கிருஷ்ண தேவராயரா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓசூர் மலை மீது சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 800 ஆண்டுக்கு முந்தைய பழமையான கோவில். கோவில் அடிவாரத்தில், ஆண்டு முழுவதும் வற்றாத பச்சை குளம் உள்ளது. கோவிலில் மூலவர் சந்திரசூடேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். கோவில் உட்பிரகாரத்தில் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. மழையில்லாத காலத்தில் இந்த லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தினால், மழை பெய்யும் என்பது ஐதீகம். அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய கற்களைக் கொண்டு கோவில் கட்டப்பட்டுள்ளதாலும், மலை மீது அமைந்துள்ளதாலும் இக்கோவில் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் தற்போது, டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, கோவிலின் முன் பகுதியில் இருந்த சிறிய அலங்கார கோபுர வளைவு மற்றும் கற்தூண்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த கோவிலின் வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால தூண்களை இடிக்க, உள்ளூர் தெலுங்கு அமைப்புகள் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அவர்கள், "கோவிலை தங்களுடைய தெலுங்கு வம்சாவளியான கிருஷ்ண தேவராய மன்னர் தான் கட்டினார். அதனால், எங்கள் ஆலோசனையை கேட்காமல் எப்படி இடிக்கலாம் என, போர்க்கொடி உயர்த்தி, கோபுர திருப்பணியை நடத்தக்கூடாது என கூறி வருகின்றனர். பதிலடியாக, தமிழ் அமைப்பினர், "சந்திரசூடேஸ்வரர் கோவிலை தங்களுடைய வம்சாவளியான சோழ மன்னர் ஆட்சியில், ராஜேந்திர சோழர் தான் கட்டினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதனால், திருப்பணி தொடரவும், செயல்படுத்தவும் துணை நிற்போம் என, நோட்டீஸ் அடித்து, பொதுமக்கள் மத்தியில் வினியோகம் செய்து வருகின்றனர். இதனால், தற்போது சந்திரசூடேஸ்வரர் கோவிலைக் கட்டியது சோழ மன்னர் ஆட்சியிலா? அல்லது கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் சிவகுமார் கூறுகையில், "கோவில், 12ம் நூற்றாண்டில் ஹொய்சாளர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. கோவில் கண்டிப்பாக சோழ மன்னர் மற்றும் கிருஷ்ண தேவராயர் மன்னர் ஆட்சியில் கட்டப்படவில்லை என்றார்
No comments:
Post a Comment