சட்டசபை தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிறப்பாக அமல்படுத்தி, பணியாற்றியதை பாராட்டி, திருச்சி ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய சங்கீதாவுக்கு, மத்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் தினத்தன்று, "சிறந்த தேர்தல் நடத்துனர்' என்ற தேசிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. திருச்சி மேற்கு தொகுதி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட, திருச்சி ஆர்.டி.ஓ., சங்கீதா, துணிச்சலாக பணியாற்றினார். ஏப்., 4 ல் அதிகாலை திருச்சி, பொன்னகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.ஜே.டி., என்ற தனியார் ஆம்னி பஸ் மேற்கூரையில், வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த, 5 கோடியே, 11 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். இதையடுத்து, ஆர்.டி.ஓ., சங்கீதா தேசிய அளவில் பிரபலமானார். அவரது சாகச செயல்களை பாராட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆக., 15 ல் சுதந்திர தினத்தன்று, வீர தீர செயல்களுக்கான, "கல்பனா சாவ்லா விருது' வழங்கி கவுரவித்தார். இதன்பின், மருத்துவ விடுப்பில் சென்ற ஆர்.டி.ஓ., சங்கீதா, தற்போது திருச்சி நில சீர்திருத்த உதவி கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
மத்திய தேர்தல் கமிஷன் சார்பாக இந்தியா முழுவதும் ஜன., 25 ல் வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. டில்லி விக்யான் பவனில் நடந்த வாக்காளர் தினவிழாவில், நாடு முழுவதும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழக சட்டசபை தேர்தலில் சங்கீதா சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதை பாராட்டி, "சிறந்த தேர்தல் நடத்துனர்' விருதும், செலவினங்களை கண்காணித்து, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தியதுக்கு கேடயமும் வழங்கப்பட்டது. தவிர, ரொக்கப்பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான, "செக்' வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் விருது வழங்கினார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி, தேர்தல் கமிஷனர்கள் சம்பத், பிரம்மா ஆகியோர் பங்கேற்றனர்
No comments:
Post a Comment