|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2012

. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்!


எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. ஆண்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் பெண்கள் வெற்றி பெற முடியும்,'' என, திருச்சி கோட்ட ரயில்வேயின் முதல் ரயில் இன்ஜின் பெண் டிரைவர் கூறினார்."அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?' என்று பெண்ணியத்தை அடக்கி ஆளும் ஆண்களுக்கு நிகராக, பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் ஜொலிக்கின்றனர். பணியுடன் குடும்ப பொறுப்புகளையும் பெண்களே நிர்வகிக்கின்றனர்.ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும் என்ற கடினமான துறைகளிலும், பெண்கள் இன்று கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக ஆட்டோ, பஸ், கால் டாக்ஸி ஓட்டுகின்றனர். தவிர, விமான பைலட்டாகவும், கப்பல் கேப்டனாகவும், ரயில் இன்ஜின் டிரைவராகவும் உள்ளனர்.

அந்தவகையில், திருச்சி கோட்ட ரயில்வேயில் முதல் பெண் ரயில் இன்ஜின் டிரைவராக சேர்ந்து, பணியாற்றி வரும் நாராயண வடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் மகளிர் தினத்தை பற்றி கூறியதாவது:திருச்சி, எடமலைப்பட்டிபுதூரில் என் கணவர் கணேசன், மகன் பவிந்தரன், மகள் சுப்ரியா தேவியுடன் வசிக்கிறேன். திருநெல்வேலி மாவட்டம் ராமச்சந்திரா நகர் தான் என் சொந்த ஊர். டிப்ளமோ படித்துவிட்டு, திருமணத்துக்கு பிறகு தேர்வெழுதி, கடந்த 2006ம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தேன்.முதலில் அனைவரும், "உனக்கு எதுக்கு இந்த வேலை' என்று அலட்சியப்படுத்தினர். என் கணவர் தான் என்னை மிகவும் ஊக்குவித்தார். எந்த வேலையாக இருந்தாலும் கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால், முழு திருப்தி கிடைக்கும்.

முதலில் பயணிகள் ரயிலில் உதவி டிரைவராக இருந்தேன். தற்போது ரயில் பாதைகள் பரிசோதனை, ரயில் பரிசோதனை போன்ற, "சண்டிங்' ரயில் இன்ஜின் டிரைவராக உள்ளேன்.இந்த வேலை ரொம்ப பிடிச்சுருக்கு. வித்தியாசமான வேலை. ஆண்கள் தான் ரயில் ஓட்ட முடியும் என்ற நிலை மாறி, பெண்ணாலும் முடியும் என்பதை நிரூபிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு இது. ஆண்களுக்கு நிகரா ரயில் ஓட்டுகிறோம் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது.எல்லா ஆண்களும் பெண்களை அடக்கி ஆள்வதில்லை. என் கணவரின் ஆதரவும், ஊக்குவிப்பும், அன்பும் இல்லையென்றால், நான் இந்த பணிக்கு வந்திருக்க முடியாது. பெண்கள் முன்னேற என் கணவர் போன்ற ஆண்களின் துணையும் இருப்பதால் தான், என்னை போன்ற பெண்கள் வெற்றி பெற முடிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...