குஜராத் பிரச்சனைகளுக்கும், சீக்கியர் பிரச்சனைகளுக்கும் ஆதரவாக இருக்கும் மத்திய அரசு தமிழர் பிரச்சனைகளில் மட்டும் மௌனம் சாதித்து வருவதை அதிமுக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் தலைமை வகித்தார்.
உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது,இந்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு எதிராக உள்ளன. ஐ.நா. சபையில் விசாரணை நடக்கையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதி விசாரிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை குறித்து உலகத் தமிழர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்தது மிகவும் அவமானகரமான செயல் என்றார்.அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் பேசியதாவது, குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோர் நாடு கடத்தப்படும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம்.கல்யாணசுந்தரமும் ஒன்றாக இணைந்து செயல்பட்டனர். ஈழப் பிரச்சனைகள் மற்றும் பல பிரச்சனைகளில் எம்.ஜி.ஆருடன் இந்திய கம்யூனிஸ்ட் எப்போதும் இணைந்தே செயல்பட்டு வந்துள்ளது.
குஜராத் பிரச்சனைகளுக்கும், சீக்கியர் பிரச்சனைகளுக்கும் ஆதரவாக இருக்கும் மத்திய அரசு தமிழர் பிரச்சனைகளில் மட்டும் மௌனம் சாதித்து வருவதை அதிமுக கண்டிக்கிறது. ஐ.நா. சபையில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கும் தீர்மானத்திற்கும், இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்திற்கும் அதிமுக ஆதரவளிக்கும் என்றார்.இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment