ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரின்போது பல லட்சக்கணக்கான தமிழர்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். சரணடைந்த விடுதலைப் புலிகளையும் ராணுவம் சித்ரவதை செய்து கொன்றது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழுவினர் இறுதி கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக அறிக்கை சமர்பித்தது.
சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே இந்த தீர்மானத்தை தோல்வியடையச் செய்ய இலங்கை பல நாடுகளிடம் ஆதரவு கேட்டு வருகிறது. மேலும் இந்த தீர்மானத்தை இந்தியா நிச்சயம் எதிர்க்கும் என்ற இலங்கையின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கூட்டத் தொடரின் இறுதியில் இலங்கைக்கு எதிராக மேலும் ஒரு தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக ஐ.நா. சபையின் ஜெனீவா கிளைக்கான இலங்கை பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். இலங்கை மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் இலங்கையை சேர்க்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment