:ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் புனேயிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்று சென்னையில் நடக்கும் 24வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.சென்னை அணி பொதுவாக சொந்த மண்ணில் அதிகமாக வெற்றி பெறுவதில்லை. 2008ல் 7ல் 3 வெற்றி, 2010ல் 7ல் 4 போட்டிகளில் மட்டும் வென்றது. ஆனால், 2011ல் மட்டும் விதிவிலக்காக, பங்கேற்ற 8 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இம்முறையும் இது தொடர வேண்டும். இத்தொடரின் முதல் போட்டியில் சொந்தமண்ணில் வீழ்ந்த சென்னை அணி, கடைசியாக பெங்களூருவுக்கு எதிராக இமாலய இலக்கை துரத்தி அசத்தியது. புனேயில் நடந்த கடந்த ஆட்டத்தில் துவக்கத்தில் நல்ல ஸ்கோர் இருந்தும், பின் வரிசையில் தோனி உள்ளிட்ட வீரர்கள் மந்தமாக விளையாடியது, பவுலிங்கில் சொதப்பியது போன்ற காரணத்தால், வெல்ல வேண்டிய போட்டியை கோட்டை விட நேர்ந்தது. இந்த தவறை இம்முறை சரிசெய்வார்கள் என்று நம்புவோம்.
தேவையா விஜய்? சென்னை அணியின் துவக்க வீரர் முரளி விஜய், இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் (10, 2, 0, 11, 8) ஒரு முறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. "பவர் பிளே' ஓவர்களில் பந்துகளை வீணடிக்கும் இவருக்குப் பதில் வேறு வீரரை களமிறக்கினால் நல்லது. டு பிளசி அதிரடியை தொடர்வது நல்ல செய்தி. தவிர, ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, கேப்டன் தோனி, பிராவோ ஆகியோர் அதிரடியாக ரன்கள் சேர்க்க வேண்டும்.பவுலிங்கில் சென்னை அணிக்கு போலிஞ்சர் தான் சற்று ஆறுதல் தருகிறார். இன்று இவர் மீண்டும் வருவார் என்று நம்பலாம். இவருடன் ஆல்பி மார்கல், பிராவோ ஆறுதல் தருகின்றனர். சுழலில் அஷ்வின், இதுவரை பங்கேற்ற 5 போட்டியில், 1 விக்கெட் மட்டும் கைப்பற்றியுள்ளது பெரும் ஏமாற்றம். இவருக்குப் பதில் 2 விக்கெட் வீழ்த்திய (4 போட்டி) ஜகாதிக்கு வாய்ப்பு தரலாம். ரவிந்திர ஜடேஜாவை பவுலிங்கில் சரியான நேரத்தில், தோனி பயன்படுத்த வேண்டும்.
துவக்க பலம்: புனே அணியின் "பேட்டிங்' பெரும்பாலும் துவக்க வீரர்களையே சார்ந்துள்ளது. ரைடர், உத்தப்பா இருவரையும் விரைவில் வெளியேற்றிவிட்டால், பின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விடலாம். இதுவரை ஜொலிக்காத கேப்டன் கங்குலி, இளம் வீரர்களுக்கு வழி விடவேண்டும். பின் வரிசையில் ஸ்டீவன் ஸ்மித், "ஆல் ரவுண்டர்' சாமுவேல்ஸ் இருவரும் பெரும் பலமாக உள்ளனர். வேகப்பந்து வீச்சில் இளம் டிண்டா தொடர்ந்து அசத்தலாக செயல்படுகிறார். இவருக்கு நல்ல "பார்ட்னர்' இல்லாதது அணிக்கு பெரும் பலவீனம் தான். இதனால், தென் ஆப்ரிக்க அணியின் பார்னலுக்கு மீண்டும் வாய்ப்பு தந்து பார்க்கலாம். கடைசி ஓவர் "வில்லன்' ஆஷிஸ் நெஹ்ரா, அனுபவ பவுலிங்கை கொடுத்தால் நல்லது.கெய்ல் புயலில் சிக்கி சிதைந்த, சுழல் வீரர் ராகுல் சர்மாவுக்குப் பதில், முரளி கார்த்திக் இடம் பெறுவார் என்று நம்பப்படுகிறது.
சென்னைக்கு முக்கியம்: தொடரின் துவக்கத்தில் இருந்தே வெற்றி தோல்வியை மாறி, மாறி பெற்று வரும் சென்னை அணி, இதுவரை 5ல் 2 வெற்றி மட்டும் பெற்றுள்ளது. தொடரில் நம்பிக்கையுடன் செயல்பட, இன்றைய போட்டியின் வெற்றி சென்னைக்கு முக்கியம். அதேநேரம் 5ல் 3 வெற்றியுடன், நல்ல ரன்ரேட்டும் வைத்துள்ள புனே, அவ்வளவு எளிதாக விட்டுத்தராது.
No comments:
Post a Comment