மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.மியான்மர் நாட்டுக்கு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று தந்தவர் அவுங் சான். இவரின் மகள் அவுங் சான் சூச்சி. பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். தன்னுடன் படித்த மைக்கேல் ஆரிஸ் என்பவரை, காதலித்து மணந்தார். இவர்களுக்கு அலெக்சாண்டர் மற்றும் கிம் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த, 88ம் ஆண்டு தன்னுடைய தாயை பார்ப்பதற்காக தாயகம் திரும்பிய சூச்சி, நாட்டின் ஜனநாயக போராட்டத்தில் குதித்தார். 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்ற போதும், அவரை ஆட்சி அமைக்கவிடாமல், ராணுவ ஆட்சி வீட்டு சிறையில் அடைத்தது. 91ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது, இவர் பரிசை வாங்க நார்வே செல்லவில்லை. 99ம் ஆண்டு இவர் கணவர் புற்றுநோயால், லண்டனில் இறந்த போது கூட தாயகத்தை விட்டு செல்லவில்லை. வெளிநாடு சென்றால் ராணுவ அரசு தன்னை தாயகம் திரும்ப அனுமதிக்காது என கருதிய சூச்சி, ராணுவ ஆட்சியாளர்களால் பல ஆண்டு காலம் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிடந்தார்.தற்போது, அவர் அங்கு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பார்லிமென்ட் உறுப்பினராகியுள்ளார். ஜனநாயக நடைமுறைகள் மியான்மரில் தலையெடுத்துள்ளதால், அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை தளர்த்த உலக நாடுகள் முன்வந்துள்ளன.
சமீபத்தில், மியான்மர் வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், சூச்சியை லண்டன் வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வரும் ஜூன் மாதம் சூச்சி, நார்வே நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதை, அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் நார்வே செல்லும் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.அதிபர் ஜப்பான் பயணம் இந்நிலையில், மியான்மர் அதிபர் தீன் சீன், ஜப்பானில் ஆறு நாடுகள் பங்கேற்கும், ஆசிய மாநாட்டில் பங்கேற்கிறார். ஜப்பானில் நாளை முதல் 24ம் தேதி வரை தாய்லாந்து, கம்போடியா, லவோஸ், வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, மியான்மர் நாட்டை சேர்ந்த அதிபர், 28 ஆண்டுக்கு பிறகு ஜப்பானுக்கு செல்வது, இதுவே முதன் முறை.
No comments:
Post a Comment