ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்திப்பது குறித்து ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணான சென்னை மைதானத்தில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்தது. இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று, கோப்பையும் கைப்பற்றியது.ஆனால் ஐபிஎல் 5 தொடரில் சென்னையில் ஆடிய போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருகிறது. இதனால் சென்னை ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துடன் உள்ளனர். சென்னையில் தோல்வி அடைவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பல காரணங்களை கூறி வருகின்றனர்.இந்த நிலையில் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விகளுக்கான காரணங்களை ஆராய உள்ளதாக, அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்விகளை தழுவி வருவது இதுவே முதல் முறை. இதற்கான காரணங்களை ஆராய உள்ளோம். கடந்த ஐபிஎல் தொடர்களில் எங்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சொந்த மண்ணில் தோல்வி பெற்று வருவதால், பல சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறோம்.கடந்த ஐபிஎல் தொடர்களில் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த ஆண்டு தோல்விகளை பெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. தோல்விக்கு ஆடுகளத்தை குறை கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எங்களின் ஆட்டத்தில் தான் குறைபாடு உள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது.இனி வரும் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்த முயன்றாலும், ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்றார்.
No comments:
Post a Comment