இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் நடந்த மே தினப் பேரணியில் சிலர் விடுதலைப் புலிகளின் கொடிகளைக் காட்டியதாக கூறப்படும் சம்பவம், அரசே நடத்திய நாடகம் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது.தங்களை தேச விரோத சக்திகள் என்று காட்டுவதற்காகவே இதுபோன்ற செயல்களை அரசு செய்கிறது என்றும் அந்தக் கட்சி கூறியிருக்கிறது.""அந்தப் பேரணியில் யாரும் விடுதலைப் புலிகளின் கொடியைக் காட்டவில்லை. அப்படியொரு சம்பவத்தை யாரும் பார்க்கவும் இல்லை'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அட்டநாயக தெரிவித்தார்.இந்தச் சம்பவமே அரசுக்குச் சொந்தமான ஐ.டி.என். தொலைக்காட்சி திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.ஐடிஎன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள்தான் புலிகளின் கொடியைக் காட்டியதாகக் கூறும் ஐக்கிய தேசியக் கட்சி எம்பியான ஹரீண் பெர்னாண்டோ, கொடியைக் காட்டியவர்கள் ஐடிஎன் தொலைக்காட்சிக்குச் சொந்தமான வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் ரோஸ்முண்ட் செனரத்னவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கடிதம் எழுதியுள்ளார். அதில், தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை தொலைக்காட்சியில் காட்டுவது சட்டத்தை மீறும் செயல் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பேரணிக்கு ஏற்பாடு செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சிகள் என்றும், தேச விரோத சக்திகள் என்றும் முத்திரை குத்துவதற்காக இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்று தமிழர் கட்சியான ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment