நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதில், மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இருப்பினும், இந்த திட்டத்தை நிறைவேற்ற, எந்த மாநில அரசுகளுக்கும் அக்கறையோ, ஆர்வமோ இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, நேற்று லோக்சபாவில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் கூறியதாவது:இந்தியா முழுவதும் ஓடும் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த திட்டத்திற்கு, மாநில அரசுகளிடம் போதிய ஆதரவு இல்லை. நதிநீர் இணைப்பில் போதிய ஆதரவோ, அக்கறையோ மாநில அரசுகளிடம் இல்லை. இத்திட்டத்தை நிறைவேற்ற பெரும்பாலான அரசுகள் தயாராக இல்லை.நதிநீர் சிக்கல்களுக்கு மத்திய அரசால் முடிந்தது எல்லாம், நடுவர் மன்றம் அமைப்பை ஏற்படுத்துவது மட்டுமே. நடுவர் மன்றத்தின் மூலம் சிக்கல்களை பேசி தீர்த்து வைக்க மட்டுமே முடியும். நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படாவிட்டால், நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இருப்பினும், இப்போதைக்கு, 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவற்றில், ஐந்து நதிநீர் இணைப்புத் திட்டங்கள், வடமாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும், 111 லட்சம் நீர்நிலைகள் இருக்கின்றன. இவற்றைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு பன்சால் கூறினார்.நெல்லை லோக்சபா எம்.பி.,யான ராமசுப்பு, "கூடுதல் தண்ணீர் உள்ள இடங்களில் இருந்து, தண்ணீர் தேவையுள்ள பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு வருவதற்கு, தனியாக நதி ஒன்றை ஏற்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா?' என்று எழுப்பியிருந்த கேள்விக்கு, இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.
No comments:
Post a Comment