தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தேர்தலை சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நியாய மாகவும் நடத்த வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் கமிஷன் உறுதியாக உள்ளது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் உள்பட பெரும்பாலான உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
புதிய டி.ஜி.பி.யாக போலாநாத் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கிடையே வடமாநிலங்களில் இருந்து வந்த 5 உயர் போலீஸ் அதிகாரிகள் தமிழக தேர்தல் பார்வையாளர்களாக பொறுப்பு ஏற்றனர்.
சென்னை மண்டலத்துக்கு ஜிதேந்தர், சேலம் மண்டலத்துக்கு ஜார்ஜ்அகமது, மதுரை மண்டலத்துக்கு டி.கே.பாண்டே, திருச்சி மண்ட லத்துக்கு பி.ஆர்.கே.நாயுடு பார்வையாளராக பொறுப்பேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும், தீவிர சோதனைகளை துணை நிலை ராணுவத்தினர், மாநில போலீசார், மாநில வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 3 வாரங்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்து வரும் வாகன சோதனை மூலம் பல கோடி ரூபாய் சிக்கியது. ஜவுளிகள், ஆடு, மாடு, கோழிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன.
தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்தை சந்தித்த போதும், பெரிய அளவில் பணம் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வாக்காளர்களைக் கவர பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டால் பொதுமக்கள் 18004256669 மற்றும் 1965 எண்களில் புகார் செய்யலாம். 044-2840064 என்ற எண்ணுக்கு பேக்சில் தகவல் அனுப்பலாம். இ.மெயிலில் புகார் அனுப்ப விரும்புபவர்கள், itcontrolroomchennai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
இதை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 14 நாட்களே உள்ளதால், பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை வேட்பாளர்கள் ரகசியமாக தொடங்கி உள்ளனர்.
இது தேர்தல் கமிஷனுக்கு ஆதாரங்களுடன் தெரிய வந்துள்ளது. பணம் கொடுப்பதை தடுக்க கூடுதல் அதிரடி வேட்டை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே வந்துள்ள வடமாநில 5 உயர் போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்
இதை ஏற்றுக் கொண்ட தலைமை தேர்தல் கமிஷன் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக வடமாநிலங்களில் இருந்து மேலும் 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக தமிழ்நாட்டுக்கு வரஉள்ளனர்.
இந்த 32 அதிகாரிகளும் ஐ.ஜி. மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகளாவார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் முறை கேடுகளை தடுக்க வட மாநிலங்களில் இருந்து சுமார் 40 உயர் போலீஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள 32 அதிகாரிகளும் தமிழ் நாட்டுக்கு வரத்தொடங்கி விட்டனர். அவர்களது தலைமையில் தனி அதிரடிப்படை செயல்படும்.
அந்த படையுடன் இந்த போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையை இவர்கள் மேற்கொள்வார்கள்.
இந்த அதிரடி படைக்கு மாவட்ட கலெக்டரும், வருவாய்துறை அதிகாரிகளும், உள்ளூர் போலீசாரும் உதவியாக இருப்பார்கள் என்று அறி விக்கப்பட்டுள்ளது. 32 வடமாநில போலீஸ் அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தும் போது அந்த நடவடிக்கை கட்சி சார்பு இல்லாமல் பாரபட்ச மற்ற முறையில் நேர்மையாக இருக்கும் என்று தேர்தல் கமிஷன் எதிர்பார்க்கிறது.
இது குறித்து தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட போது உள்ளூர் போலீசார் கண்டும் காணாததும் போல இருந்து விட்டனர். அவர்களால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க இயலவில்லை. எனவே தான் வடமாநில உயர் போலீஸ் அதிகாரிகளை கண்காணிப்பு களத்தில் இறக்கி விட்டுள்ளோம் என்றார்.
தேர்தல் கமிஷனின் புதிய கட்டுப்பாடுகளால் ஏற்கனவே அரசியல் கட்சியினர் அரண்டு போய் உள்ளனர். தற்போது வடக்கில் இருந்து மேலும் 32 உயர் போலீஸ் அதிகாரிகளை வரவழைத்து இருப்பது, பெரும்பாலான வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
No comments:
Post a Comment