|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 March, 2011

வெற்றியை நிர்ணயிப்போம்... வாருங்கள்!


தேர்தல் வாக்குறுதிக்கு அரசியல் கட்சிகள் கட்டுப்பட்டவை அல்ல என்பதால், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன.

* "தட்டினால் தங்கம் வரும்; வெட்டினால் வெள்ளி வரும்' என்றனர். தலைவர்கள் வீட்டில் மட்டும், தங்கமும், வெள்ளியும் வந்தது.

* "தேனும், பாலும் ஓடும்' என்றனர். நீர் இல்லாமல்... மணலை அள்ளி, நதிகள் மரணித்து வருகின்றன.

* "இந்தி போராட்டம்' என்றனர். தலைவர்களின் பிள்ளைகள், பார்லிமென்டில் பேச அல்லது பேசுவது புரிய இந்தி படிக்கின்றனர்.

* இலவச மதுபானமும், இலவச சினிமாவும் மட்டும் பாக்கி... அதையும் அடுத்து அறிவித்து விடுவர். கங்கை, காவிரி போன்ற நதிநீர் இணைப்பு பற்றி, யார் பேசுவர்? வெளிநாட்டில் உள்ள தமிழக தமிழர்கள் நல வாரியம் யார் பேசுவர்? அவர்களுக்கு என்ன ஓட்டு உள்ளதா, இருந்தாலும், ஓட்டுப் போடப் போகின்றனரா? வாக்குறுதிகள் எல்லாம் சின்னப்பிள்ளைக்கு தின்னத் தரும் ஐஸ்குச்சி போல. சப்பி, சப்பி, நக்கிய பின், குச்சி மட்டும் தான் மிஞ்சும். ஒவ்வொரு தேர்தல் முடிவிலும், மகாஜனம் குச்சியுடன் தான் நிற்கிறது.

* ஓட்டுக்கு லஞ்சம் தரும் வேட்பாளர், என்ன அவரின் பாட்டன், அப்பன் சொத்தை விற்றா தருகிறான். "திருடியதைத்தான் திருப்பி தருகிறான்...' எனவே, வாக்காளரும், ஓட்டுக்கு நோட்டை எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

* வாக்காளர்கள் பணம் வாங்குவதை மறுத்தால், "இது உங்களிடம் திருடியது தான்; உங்கள் பணம் பெற்று கொள்ளுங்கள்' என்று கூறும் நிலை வேட்பாளருக்கும் வந்து விட்டது.

எந்த கட்சி இன்று தேர்தல் நிதி திரட்ட, உண்டியல் குலுக்கி ஊர்வலம் வருகிறது. இல்லையே... தொழில் அதிபர்களின் தோளில் கட்சிகள் சாய்ந்து விட்டதே. நன்கொடை என்ற பேரில், முன் பேரம் பேசப்பட்டு வருகிறது. காந்தி படம் உள்ள கரன்சி நோட்டு காட்டினால் தான், காந்தி கூட டிபாசிட் பெற முடியும். இலவசம் எனும் மறைமுக லஞ்சம் எல்லாரையும் அடிமையாக்கி விட்டது. வரிபணம், வளங்களை ஏற்படுத்தாமல், வாரி இறைக்கப்படுகிறது, கவலை தரும் நிலை. வாரிசு அரசியல் என்பது, மேல் மட்டத்தில் மட்டுமில்லை. வார்டு கவுன்சிலர் வரை வந்து விட்டது. தாத்தா எம்.பி., அப்பா அமைச்சர், மகன் எம்.எல்.ஏ., என, தலைமுறை, தலைமுறையாக தொகுதியை தக்க வைக்கவும், தொகுதி வாரிசுகள் வந்து விட்டன.

தமிழகத்தின் தலைவிதியோ வேறு. ஒரு கட்சியோ, குடும்ப அரசியல் நடத்துகிறது. இன்னொரு கட்சியை, ஒரு குடும்பம் மட்டும் நடத்துகிறது. மாற்று தீர்வு என்று எண்ணியவர் கூட, மண்டியிட்டு, அடிபணியும் போது, தமிழகத்தில் இனி, திராவிட கட்சிகளின் ஊழலுக்கு தீர்வு இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. கூட்டணி என்பது குடும்பத்தை காப்பாற்றவும், அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை பெற மட்டுமே என்பதை, ஒவ்வொரு தேர்தலும் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் நலம் பேசிய விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.,வும், காங்கிரஸ் கைபிடித்து விட்டன. வன் கொடுமை சட்டத்தை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., கூட்டணியில், அதை எதிர்க்கும் கொங்கு கவுண்டர் கழகம். தேர்தலுக்கு பிறகு, கூட்டணியில் இருந்து விலகி, வேறு ஒரு கட்சி ஆட்சி அமைக்க, ஒவ்வொரு கட்சியும் பேரம் பேசும். இதையும் சகித்து கொள்ள வேண்டும். இதற்கு பெயர் அரசியல் சாணக்கியம். ஜாதி கட்சிக்கு ஓட்டளிக்காமல், அதே தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிக்கு ஓட்டளியுங்கள். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட ஜாதி மட்டும் உள்ளதா? ஜாதி கட்சியின் வேட்பாளர்கள் தோற்றால் தான், ஜாதி கட்சிகளுக்கு புத்தி வரும்.

ராமன் ஆண்டால் என்ன; ராவணன் ஆண்டால் என்ன என்பதில் என்ன பெருமை. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்பதில், நமக்கு அக்கறையில்லை என்றால், மிருகத்திற்கும், மனிதனுக்கும் என்ன வேறுபாடு? தவறான வேட்பாளருக்கு எதிராக ஓட்டளிக்காமல் ஒதுங்கி நிற்பது கூட, தவறான வேட்பாளரை ஆதரிப்பது போல் ஆவதுடன், தவறான வேட்பாளர் வெற்றி பெற பெரிதும் உதவுகிறது; இதுவும், ஒரு ஜனநாயகப் படுகொலை தான். ஒரு எம்.எல்.ஏ., ஜெயித்தால், குறைந்தபட்சம் என்ன செய்வார் என பாருங்கள்...

தொகுதி பற்றி சட்டசபையில் பேசுவாரா? தொகுதி மக்களை அடிக்கடி சந்திப்பாரா? எம்.எல்.ஏ., விடுதியில் சந்திக்க அனுமதி தருவாரா? தொகுதியில் தொழில் வளம் பெருக என்ன செய்தார், செய்வார்? கட்சி மாறுவதில் வல்லவரா என பார்த்து ஓட்டளியுங்கள். கட்சி தலைமை என்ன என்பதை மறந்து, நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டளியுங்கள். இதன் மூலம், நல்ல வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், ஜாதி கட்சிகளும் உணரும். எல்லா அரசியல் கட்சிக்கும் என்று, சில ஓட்டு வங்கிகள் இருக்கும். அவர்கள் அந்த கட்சிக்கு அல்லது அதன் கூட்டணிக்கு தான் ஓட்டளிப்பர். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என முடிவு செய்யாத வாக்காளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் இருப்பர். உண்மையில் அவர்கள் தான், வெற்றியை நிர்ணயம் செய்பவர்கள். அவர்களில் நானும், நீங்களும் உள்ளோம். நல்ல வேட்பாளருக்கு ஓட்டளித்து, வெற்றியின் காரணியில் பங்கு பெறுவதில் பெருமை கொள்வோம். சிந்தியுங்கள்... ஏப்ரல் 13 அன்று, ஓட்டுச்சாவடியில் சந்திப்போம். இ-மெயில்: asussusi@gmail.co.in

- எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி , வழக்கறிஞர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...