|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 March, 2011

லிபியாவைத் தொடர்ந்து சிரியாவிலும் பொதுமக்கள் கலவரம்; கட்டிடங்கள் தீ வைத்து எரிப்பு

 
கடந்த பிப்ரவரி மாதம் துனிசியாவிலும் அதைத் தொடர்ந்து எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. அவை முடிவுக்கு வந்த நிலையில் லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அதன் பக்கத்து நாடான சிரியாவிலும் போராட்டம் வெடித்துள்ளது.
 
அங்கு பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல்-ஆசாத் கடந்த 50 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்து வருகிறார். மேலும், அங்கு 48 ஆண்டுகளாக அவரச சட்டம் அமலில் இருந்து வருகிறது. அதனால் அதிபர் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த போராட்டம் கலவர மாக மாறியுள்ளது. அங்குள்ள தேரா நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு அவர்களை மக்கள் தாக்கினர்.அச்சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கலவரம் வலுவடைந்தது. நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் தேரா நகருக்கு வரும் ரோடுகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து தேரா நகரின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் பறந்தபடி போராட்டக்காரர்களின் நடவடிக்கையை கண்காணித்தது.இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதில் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பாத் கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தனர்.
 
மேலும் அதிபர் ஆசாத்தின் உறவினர்களுக்கு சொந்தமான 2 டெலிபோன் நிறுவனங்களுக்கும் தீ வைத்தனர். போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் தேரா நகரில் இயங்கும் இண்டர்நெட் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிலையங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.
 
மின்சாரம் நிறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அவர்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதற்கிடையே போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சிரியா அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...