கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை. விலையை உயர்த்தினாலும்கூட, இவற்றின் புதிய விலையானது இப்போது இறக்குமதி செய்யப்படும் அதே மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளின் விலையைவிட 15 விழுக்காடு குறைவாகத்தான் இருக்கிறது என்று இந்த ஆணையம் சமாதானமும் கூறியிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடு இந்தியா என்கிற பெருமை விரைவில் வந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இப்போது 160 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 40 மில்லியன், அதாவது, 4 கோடி பேர், இந்தியாவில் இருக்கின்றனர். இதன் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சர்க்கரை நோயாளி என்கிற அளவுக்கு இந்த நோய் அதிகரித்து வருகிறது. ஆயினும் இந்த நோய்க்கு இந்திய அரசு முக்கியத்துவம் தராமல் இருப்பதுடன், மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எந்த முனைப்பும் காட்டாமல் இருக்கிறது. ÷சர்க்கரைநோய் தொற்றுநோய் இல்லை என்பதற்காக இந்திய அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. ஏனென்றால் சர்க்கரை நோய் எல்லா நோய்க்கும் காரணமாகிறது. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது, சிறுநீரகம் செயலிழக்கிறது. நரம்புகள் பாதிக்கின்றன. இதனால் கால்கள் மரத்து, புண்ணாகி அவற்றை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலையும் பலருக்கு நேர்ந்துவிடுகிறது.
வட இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு செலவு நேர்கிறது என்கிற கணக்கெடுப்பை ஐந்து ஆண்டுகளுக்கு சண்டீகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்ததில், ஒரு சர்க்கரை நோயாளி, குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருப்பின், அவர் தனது வருவாயில் 25 விழுக்காட்டை செலவிட நேர்கிறது. அதாவது குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 வரை செலவிட நேர்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மாதம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்தல், சர்க்கரை நோய் அளவை அறியும் சோதனைகளைச் செய்துகொள்ளுதல், நாள்தோறும் சாப்பிடும் மருந்துகள் ஆகியவை மட்டுமே இதில் அடங்கும். இது தவிர, மறைமுகச் செலவுகளும் இருக்கின்றன. அதாவது சர்க்கரை நோயாளி தனக்காக மருத்துவக் காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரீமியத் தொகை சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவர் தனக்காக பிரத்யேகமான செருப்புகளை அணிய வேண்டியிருக்கும். இது போன்ற மறைமுகச் செலவுகளையும் சேர்த்தால், ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஆகும் செலவு மேலும் அதிகரிக்கும். ஒரு பொருளைப் பயன்படுத்துவோர் அதிகரித்தால் அப்பொருளின் விலை குறையும் என்பதுதான் வர்த்தக மந்திரம். கைப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து கைப்பேசியில் பேசுவதற்கான கட்டணமும் ஒரு நிமிடத்துக்கு 10 காசுகளுக்கும் குறைவாகவும் சேவை அளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக மாறிவரும் சூழ்நிலையில், மருந்துகளின் விலையைக் குறைப்பதுதானே சரியான முடிவாக இருக்கும்?
இந்திய மருத்துவச் சந்தையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் போட்டிபோடும் ஆரோக்கியமான சூழ்நிலை கருதி இத்தகைய விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறது தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம். ஆரோக்கியமான வியாபார சூழ்நிலை யாருக்கு? நமது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அல்ல. அதிக விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு. விலை அதிகரிப்பினால், உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் லாபமடையும் என்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அதிகம் விற்பனையாகும் என்பதுதானே உண்மை? சர்க்கரை நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள்தான் என்கிறது மற்றொரு ஆய்வு. காரணம், ஏழைகளால் தங்கள் சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள முடிவதில்லை. உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற மருத்துவரை அணுகவும் ஏழைகளிடம் பணவசதி இல்லை. இதனால் நாள்பட்ட நிலையில், சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகம் விழித்திரை பாதிக்கப்பட்டு அல்லது கால்கள் மரத்துப்போய் ஆறாப் புண்களுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் அவர்களது சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம். ஆனால் அவர்களோ ஏழைகள். சர்க்கரை நோய் மருந்துக்கான மூலப்பொருள் விலை, அதை தயாரித்து பெட்டிகளில் அடைத்தலுக்கான செலவு, வெளியிடங்களுக்கு அனுப்பும் லாரி வாடகை எல்லாமும் உயர்ந்துவிட்டது என்று நியாயப்படுத்த முனைகிறது தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம். இந்த அமைப்பு 1977-ம் ஆண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு விரும்பினால், இதன் முடிவுகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யவும், முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இயலும்.
சர்க்கரை நோயை, தொற்றிப்பரவாத நோய் என்பதாகக் கருதி அலட்சியம் செய்யாமல் அதைக் கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்கி, மருந்துகளைக் குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்யும் கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும், இறக்குமதி செய்பவர்களுக்கு ஆரோக்கியமாகப் போட்டியிட்டு பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதுமா ஓர் அரசின் நோக்கமாக இருக்க முடியும். உள்ளூரோ, வெளியூரோ மருந்துகளின் விலையைக் குறைத்து மக்களை வாழ வைக்க வேண்டிய அரசு, வியாபாரிகளை வாழ வைக்கத் துடிக்கிறதே, இது என்ன வியாதி என்று புரியவில்லை!

No comments:
Post a Comment