|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 March, 2011

இலவசங்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துமா?



வெட்கிரைண்டர், மிக்சி மட்டுமல்ல, வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் இலவசமாகத் தருவார் கலைஞர். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் இலவசமாக வழங்குவார். அவர்தான் கலைஞர்” என்று சென்ன்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பரிதி இளம்வழுதியை ஆதரித்து நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் முழங்கியுள்ளார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்.

காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளோடு ‘பலமான வெற்றிக் கூட்டணி’ அமைத்தாலும், “ஐந்தாண்டுக் கால ஆட்சியில் செய்த சாதனைகள் தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது உறுதி” என்று முழங்கினாலும், இவை யாவும் தங்களை ஆட்சியில் அமர்த்துமா என்பதில் தி.மு.க. அணிக்கு உள்ள ஐயப்பாடே இந்த இலவச அறிவிப்புக்களுக்குக் காரணம் என்பதில் ஐயமேதுமில்லை.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2க்கு கிலோ அரிசி, நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி ஆகிய முக்கியமான மூன்றுத் திட்டங்களை தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அறிவித்தது. அது அந்தக் கட்சிக்கு வாக்காளர்களின் ஆதரவையும் தந்தது. தி.மு.க.வை ஆட்சியிலும் அமர்த்தியது

நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற ஒரு திட்டம் மட்டுமே பெருமளவிற்கு செயல்படுத்தவில்லை என்பதைத் தவிர, மற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமின்றி, ரூ.2க்கு அளித்த அரிசியை ரூ.1 ஆக குறைத்தது தி.மு.க. ஆட்சி. இதுவும் ஏழை, எளிய மக்களை மகிழ்வுறச் செய்தது என்பதில் ஐயமில்லை.
ஆனால், அதே திட்டங்கள் தொடரும் என்று அறிவித்தால் மட்டுமே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று தி.மு.க. தலைமை நினைத்த காரணத்தினால்தான், எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது அறிக்கையில் மேலும் ஏராளமான இலவச அறிவிப்புக்களை அள்ளி வீசியுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு தற்போது ரூ.1 க்கு அளிக்கப்பட்டுவரும் 35 கிலோ அரிசி இதற்கு மேல் இலவசமாக அளிக்கப்படும் என்றும், இதானல் 18.65 இலட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும் அறிவித்துள்ளது மட்டுமின்றி, நடுத்தர மக்களின் வாக்குகளைக் கவரவும் திட்டமிட்டு, மாவு அரவை இயந்திரம் அல்லது அதன் சிறிய வடிவமான மிக்சி இலவசமாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடும்போதே, “இலவச வண்ணத் தொலைக்காட்சி போல இதுவும் தமிழ்நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்படும்” என்று கூறியதோடு, இது தாய்மார்களுக்கான இலவசத் திட்டம் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்தது, அவர் எவ்வாறு நடுத்தர மக்களின் வாக்குகள் குறிவைக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டியது.

அதேபோல், சுய உதவுக் குழுக்களுக்கு அளிக்கப்படும் சுழல் நிதி உதவி ரூ.4 இலட்சமாக உயர்த்தப்படும் என்று கூறி, அதில் ரூ.2 இலட்சம் மானியமாக வழங்கப்படும் என்று கூறியது கிராமப் புற மகளிர் வாக்குகளை அள்ளுவதற்கு என்பதும், திருமண நிதியுதவி, கர்ப்பக் கால நிவாரணம் ஆகியவற்றை உயர்த்தியது முழுமையாக கீழ்தட்டு பெண் வாக்காளர்களை ‘கவர்ந்து’ இழுக்கவே என்பது பளிச்சிடுகிறது.

வயதானவர்கள், மிக வயதானவர்கள் என்று பிரித்து போக்குவரத்து, மருத்துவ சிகிச்சை சலுகைகளை அறிவித்துள்ளது, மத்திய அரசு இரயில்வே நிதி நிலை அறிக்கையிலும், பொது நிதி நிலை அறிக்கையிலும் மத்திய அரசு கடைபிடிக்கும் வித்தையை தமிழக முதல்வரும் கடைபிடித்து மரியாதையாக வாக்குகளை பெற முயற்சித்துள்ளார்.

எனவே, தனது 5 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனைகளையோ அல்லது தான் கண்டுள்ள வெற்றிக் கூட்டணியையோ நம்பவில்லை. மாறாக..இலவசத்தை மிகவும் நம்பியே தனது ஆட்சிக் கனவை நனவாக்க முயற்சிக்கிறது தி.மு.க.

இந்த இலவசத் திட்டங்களுக்கான செலவை டாஸ்மாககை வைத்து ஈடேற்றிவிடலாம் என்பதை அறிந்துதான் தி.மு.க.தலைமை இலவசங்களை அள்ளி வீசியுள்ளது என்பது வேறு கதை. ஆனால், இந்த இலவச அறிவிப்புகள் தி.மு.க.வின் ஆட்சிக் கனவை நனவாக்குமா?

2006ஆம் ஆண்டு முதலான தி.மு.க. ஆட்சியின் மீதும், கட்சியின் மீதும் இன்று படிந்துள்ள 2ஜி கரை, நடுத்தர, மேல் தட்டு, கிராம விவசாய, படித்த மக்களிடமிருந்து அதனை மிகவும் அந்நியப்படுத்திவிட்டது.

2ஜி அலைக்கற்றை ஊழலில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸிற்கு பெரும் பங்கு உண்டென்றாலும், மத்திய ஆட்சி அதனிடம் உள்ளதால், தி.மு.க.வை தனித்துக் காட்டி, தன்னை காங்கிரஸ் காப்பாற்றிக்கொள்ளும். இந்த ஊழல் வழக்கில் வரும் 30ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கை தி.மு.க.வின் தேர்தல் ‘வெற்றி’க்கு வேட்டு வைப்பதாக இருக்கும்.

ஆற்காடு வீராசாமியே வில்லன்
வெட் கிரைண்டர் அல்லது மிக்சி எந்த அளவிற்கு விற்கும் என்பது ஐயத்திற்குரியதே. ஏனெனில் இந்த 5 ஆண்டுக் காலத்தில் மின் தடை என்பது தி.மு.க. ஆட்சிக்கு மிகப் பெரிய அவப்பெயரை பெற்றுத் தந்துவிட்டது. குடும்பப் பெண்களைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டாலும், பொதுவாக குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும், அதிலும் குறிப்பாக மாணவ, மாணவிகளை பெரிதும் பாதித்தது மின் தடையாகும். இது சென்னையை விட ஊரகப் பகுதிகளில் பெருமளவிற்கு மக்களை எரிச்சலூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, சென்னையின் புறநகர் பகுதிகளில் இயங்கிவரும் ஹூண்டாய், ஃபோர்ட், நோக்கியா போன்ற பெரும்பான்மையான அயல் நாட்டு நிறுவனங்களுக்கு - புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டதற்கு இணங்க - தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதால் சென்னை மக்களுக்கு தடையற்று மின்சாரம் கிடைக்கிறது என்பதும் மக்கள் அறிந்ததே. எனவே, மின்சாரத்தை நினைப்பார்களா? இலவசத்தை நினைத்து உதயசூரியனில் விரலை அழுத்துவார்களா?

மின் தடை பெருமளவிற்கு பாதித்தது விவசாயிகளைத்தான். அவர்களின் கோபத்திற்கு அரசிடமும் பதில் இல்லை, தேர்தல் அறிக்கையிலும் பதில் இல்லை. “தமிழ்நாட்டின் அதிகரித்து வரும் மின் தேவைக்கேற்ற அளவிற்கு மின் உற்பத்தியை பெருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்ற வாக்குறுதி தி.மு.க.வை கரை சேர்க்காது. விவசாயிகள் மட்டுமின்றி, விசைத்தறி போன்ற மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறு தொழில்கள் பலவும் - கோவையில் இருந்து கரூர் வரை - மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே வெட் கிரைண்டர் எந்த அளவிற்கு ஓடும் என்று கூறுவதற்கில்லை.

ஆனால், வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள ஏழை, எளிய மக்களுக்கு மாதத்திற்கு 35 கி.கி. அரிசி இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பது நிச்சயமாக அந்த மக்களின் வாக்குகளை தி.மு.க.விற்கு முழுமையாக கிடைக்கச் செய்துவிடும் என்று கூறப்படுகிறது. என்னதான் அத்வாசியப் பொருட்கள் விலையேற்றம் சமையலறையை பாதித்தாலும், அவர்களின் வாழ்நிலையில் இந்த இலவசம் பெரும் மதிப்பை பெற்றுள்ளது.

எனவே, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் தமிழ்நாட்டின் 30 முதல் 35 விழுக்காடு மக்களின் (வாக்காளர் பங்கு 20 முதல் 25 விழுக்காடு) வாக்கு வங்கியில் தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாகவே உள்ளது. அதன் கூட்டணிகளால் 8 முதல் 10 விழக்காடு வாக்குகள் அதற்கு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில் பொதுவாக நிலவிவரும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி 50 விழுக்காட்டிற்கும் அதிகமானது என்பது தேர்தல் மதிப்பாளர்களின் கருத்தாகும்.

எனவே, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசப்பட்ட இலவசங்கள் அதனை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துமா என்பது ஐயத்திற்குக்குரியதே.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...