|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 June, 2011

யாருக்கு நல்ல திட்டம் பழ.கருப்பையா!

புதிய அரசால் கைவிடப்பட்ட திட்டங்கள் நாட்டுக்கு நல்லத் திட்டங்களா, அல்லது ஒரு குடும்பத்துக்கு நன்மை பயக்கும் திட்டங்களா என்று துறைமுகம் தொகுதி அதி.மு.க. எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கேள்வி எழுப்பினார்.  பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியது:

தனியாருக்குச் சொந்தமான கேபிள் டி.வி. நிறுவனத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இது கடந்த ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த சட்டம்தான். அதை கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், தன்னுடைய குடும்ப நிறுவனம் என்பதால் அந்தச் சட்டத்தை ரத்து செய்தார்.  தனது குடும்ப நன்மைக்காக கருணாநிதி சட்டங்களை உருவாக்கியபோதும், ரத்து செய்தபோதும் தோழமைக் கட்சிகள் அதற்குத் துணையாக இருந்தன.
 இப்போது, ஜெயலலிதாவின் அரசு கேபிள் டி.வி.யை நாட்டுடைமையாக்கி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்க இருக்கிறது.

இலவச கலர் டி.வி. திட்டம்: கருணாநிதியின் குடும்பத்தினர் ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 வசூல் செய்தார்கள். ஒன்றரை கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை போவோர், வருவோருக்கெல்லாம் விரட்டி, விரட்டி கொடுத்தார்கள். இதற்கு அரசுப் பணம் பல ஆயிரம் கோடி விரயம் செய்யப்பட்டது.  ஒரு கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.200 என்றால், ஒன்றரை கோடி கேபிள் இணைப்புக்கு மாதம் ரூ.300 கோடி வருவாய் கிடைக்கும். அப்படியானால், ஒரு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்கும்.

 நல்லத் திட்டங்களையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்களே, இது நாட்டுக்கு நல்ல திட்டமா, அல்லது அவர்களின் குடும்பத்துக்கு நல்லத் திட்டமா?  அடுத்த ஆட்சிக் காலத்துக்கும் சேர்த்து திட்டம்: எந்த ஒரு ஆட்சியும் தன் ஆட்சிக் காலத்துக்கு மட்டுமே திட்டமிடும். ஆனால், கடந்த தி.மு.க. அரசு, தன்னுடைய ஆட்சியில் எஞ்சியிருந்த ஓராண்டு காலத்துக்கு வீடு வழங்கும் திட்டத்தைப் போடாமல், அடுத்த ஆட்சிக் காலத்தையும் சேர்த்து 6 ஆண்டுகளுக்கு 21 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுப்பதாக விளம்பரம் செய்தனர்.
 ஓர் அரசாங்கம் அந்த ஆண்டில் கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு மட்டுமே அட்டைகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. அரசு 19 லட்சம் அட்டைகள் வழங்கியது.

அந்த அட்டைகளில் "த' (த என்பது தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து சில ஆயிரம் அட்டைகளிலும், "நி.த.' (நிபந்தனை தகுதி உடையவர்கள்) என்ற எழுத்து பல லட்சம் அட்டைகளிலும் பொறித்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
 "த' அரசு நிலங்களில் வசிப்பவர்கள். "நி.த.' தனியார் நிலங்களிலும், கோயில் நிலங்களிலும் வசிப்பவர்கள். தடையின்மைச் சான்றிதழை "நி.த.' அட்டையைப் பெற்றுள்ளவர்கள் அவர்களாகவே பெற்றுவர வேண்டும்.
 இது ஒரு காலத்திலும் நடைபெறாது. எந்தக் கோயிலும், தனியாரும் அவர்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கமாட்டார்கள். ஆனால், அவர்களை ஏமாற்றும் பொருட்டு "நி.த.' என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இப்படி மக்களை மோசடியாக நம்ப வைக்கின்ற வேலையை ஒரு அரசே செய்யுமானால், அந்த அரசின் திட்டம் எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்! இத்தகைய மோசடி திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கைவிடுவது நியாயமா, நியாயமில்லையா?  ஆனால், இந்த அரசு மக்களைக் கடனாளியாக்காமல், அரசுப் பொறுப்பேற்று ரூ.1.8 லட்சம் செலவில் 300 சதுரஅடி அளவில் பசுமை வீடுகளைக் கட்டித்தர இருக்கிறது. இது வரவேற்கத்தக்கதா, இல்லையா? என்றார் பழ.கருப்பையா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...