என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவின்யு வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது ?'' என்று ஜூன் மாதம் 2ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.
பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.லின் 2009ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது. பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்கமுடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன. தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.
2007ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல் லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.
முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும் '' என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.
ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவை ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.
இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்குஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், ""1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்
இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது. ஒன்று, 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது, அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை. மூன்றாவது, அந்த மோசடி இணைப்பகம், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. நான்காவது, இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது ""டிடிஐஎஸ்டி (துறை) பிரிவில் '' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.
323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக மாறன் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "" 24371500 '' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்டிடி வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது. ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும் ? இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். ""7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.
ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள்,விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது. 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!
பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம்,மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?
உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன?
No comments:
Post a Comment