2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில் கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் 19 கொல்கத்தா நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக, வருமான வரித்துறை விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரரான கனிமொழி எம்.பி., அந்த டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சினியுக் மீடியா நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கும் இடையே இந்த பணம் கைமாறி இருக்கிறது.
2 ஜி ஆதாயத்துக்காக கிடைத்த லஞ்சப் பணம்: ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளரான சாகித் பல்வாவின் மற்றொரு நிறுவனமான டி.பி. குழுமம் 'லஞ்சமாக' இந்த பணத்தை கலைஞர் டிவிக்கு வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது.
சினியுக் நிறுவனம் மூலமாக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணை தொடங்கியதும், வணிக பரிமாற்றத்துக்காக கடனாக இந்த பணத்தை பெற்றதுபோல் காட்டி கலைஞர் டி.வி. திருப்பிச் செலுத்தத் தொடங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.
கொல்கத்தா போலி நிறுவனங்கள்: இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் 19 நிறுவனங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளன. வருமான வரித்துறை அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்த நிறுவனங்களில் இருந்த பணம் சபையர் மீடியா மற்றும் கட்டமைப்பு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் அந்த நிறுவனம் சார்பில் அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.83 கோடி ரூபாய் மாற்றப்பட்டு இருக்கிறது.
அஞ்சுகம் பிலிம்ஸ் நிறுவனம், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட 'கடன்' தொகையான 230.31 கோடியை கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு திருப்பிச் செலுத்துவதற்காக 69.61 கோடி கடனாக வழங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வருமான வரித்துறை விசாரணையில், கொல்கத்தாவில் செயல்படுவதாக கூறப்படும் அந்த 19 நிறுவனங்களும் போலியானவை என்று தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment