முந்தைய தி.மு.க., ஆட்சியில், காவல் துறையின் பணிகளில் யார் தான் குறுக்கிடுவது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்கள் குறுக்கிடுவர், அதிகாரிகள் குறுக்கிடுவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அதை எல்லாம் தாண்டி பல வினோத சம்பவங்கள் முந்தைய ஆட்சியில் நடந்துள்ளன. ஒருமுறை, மத்திய சென்னை பகுதியில், நள்ளிரவு 2 மணியளவில், ஒரு வாலிபர் குடித்துவிட்டு ரகளை செய்த தகவல், கன்ட்ரோல் ரூமுக்கு போனது. அங்கு ரோந்து பணியிலிருந்த பெண் எஸ்.ஐ.,க்கு, கன்ட்ரோல் ரூமில் இருந்து தகவல் தரப்பட்டது.
உடனே அந்த பெண் எஸ்.ஐ., அங்கு சென்று, ரகளை செய்த வாலிபரை கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். உடனே அங்கு வந்த ஒரு பெண், எஸ்.ஐ.,யின் கையை பிடித்து கீழே இறக்கி, கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தார். "என்னடி நினைச்சிட்டு இருக்கே? என் பிள்ளையையாடி கைது செய்யற?' என்று கேட்டு தன் பையனை கையை பிடித்து, வண்டியை விட்டு இறக்கி அழைத்துச் சென்றுவிட்டார். பெண் எஸ்.ஐ.,யை கன்னத்தில் அறைந்த அந்த பெண் யார்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டு வேலைக்காரி. இந்த லட்சணத்தில் ஆட்சி நடந்து இருக்கிறது. அந்த பெண் எஸ்.ஐ., காவல் நிலையத்துக்குச் சென்று, இன்ஸ்பெக்டரிடம் புகார் சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த இன்ஸ்பெக்டர், தகப்பனார் போல இருந்து அறிவுரை கூறி, "நீ தொடர்ந்து காவல் துறை பணியில் இருக்கணுமா? இதை கண்டுக்காம அப்படியே விட்டுவிடு' என்று கூறியுள்ளார். முந்தைய ஆட்சியில், காவல் துறையினர் தங்கள் கடமையை செய்ய விடாமல், பல அதிகார மையங்களும் குறுக்கிட்டன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தில், 365 அங்கத்தினர் இருக்கின்றனர். அவர்கள் தான் குறுக்கிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அவர்கள் வீட்டு வேலைக்காரர்களும் குறுக்கிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் கூறினார்.
No comments:
Post a Comment