|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 August, 2011

சச்சினை வீழ்த்திய திட்டம் அம்பலம்! பலித்தது கம்ப்யூட்டர் கணக்கு!

சச்சின் விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து அணி வகுத்த அதிரடி திட்டம் அம்பலமாகியுள்ளது. கணித நிபுணர் உதவியுடன் நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இவரது பலவீனங்களை கண்டறிந்துள்ளது. இதன் மூலம் சதத்தில் சதம் காணும் இவரது கனவை தகர்த்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் தோல்வி அடைந்த இந்திய அணி, தொடரை இழந்தது. இம்முறை இந்திய வீரர் சச்சின், சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரது ஆட்டம் படுமோசமாக இருந்தது. இங்கு 7 இன்னிங்சில்(34, 12, 16, 56, 1, 40, 23) சேர்த்து 182 ரன்கள்(சராசரி 26.00) மட்டுமே எடுத்துள்ளார். இவர் தொடர்ந்து தடுமாறியதற்கு, இங்கிலாந்து அணியின் தொழில்நுட்ப ஆலோசகர் நாதன் லியாமன் வகுத்த திட்டமே காரணம் என தெரிய வந்துள்ளது.

கேம்பிரிட்ஜில் படித்த லியாமன் மிகச் சிறந்த கணித நிபுணர். இவர், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டர் "சிமுலேட்டரில்' கிரிக்கெட் ஆடுகளங்களின் தன்மை, வீரர்கள் விளையாடும் முறை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளார். உதாரணமாக, ஆடுகளத்தில் பந்து விழும் இடத்தை 100 * 15 செ.மீ., என்ற அளவில் 20 பகுதிகளாக பிரித்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு எந்த இடத்தில் பந்துவீசினால் நெருக்கடி ஏற்படும் என்பதை கண்டறிந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் அரங்கில் வீசப்பட்ட பந்துகளை பதிவு செய்து வைத்திருக்கிறார். பேட்ஸ்மேன்களின் "புட் வொர்க்', "பேட்' பிடிக்கும் முறை போன்றவற்றையும் துல்லியமாக கணக்கிட்டுள்ளார்.

லியாமன் கணக்குகளின்படி, சச்சின் 50 ரன்களை எட்டும் வரை பெரும்பாலும் "ஆன்' திசையில் தான் விளையாடுவாராம். இந்த பலவீனத்தை அறிந்து கொண்டு அவருக்கு "ஆப்- சைடில்' பந்துவீசச் சொல்லியுள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரை அவருக்கு வீசப்பட்ட 261 பந்துகளில், 254 பந்துகள் "ஆப் சைடுக்கு' வெளியே செல்லும் வகையில் வீசப்பட்டன. 6 பந்துகள் "ஆப்-சைடு' திசையில் வீசப்பட்டன. ஒரு பந்து மட்டுமே "லெக்' திசையில் வீசப்பட்டது.
இந்த திட்டத்தை அறிந்த கொண்ட சச்சின், மூன்றாவது டெஸ்டில் தனது அணுகுமுறையை மாற்றியுள்ளார். "மிடில் ஸ்டம்ப்பை' மையமாக வைத்து ஆட முயற்சி செய்துள்ளார். "கிரீசுக்கு' வெளியே நின்று "பேட்' செய்துள்ளார். இதற்கு பதிலடியாக, ஆண்டர்சன் பந்துவீசிய போது, விக்கெட் கீப்பர் மாட் பிரையரை "ஸ்டம்ப்ஸ்' அருகில் வந்து நிற்க சொல்லியுள்ளார் இங்கிலாந்து கேப்டன் ஸ்டிராஸ். இதனை பார்த்த சச்சின் மீண்டும் "கிரீசுக்குள்' செல்ல நேர்ந்ததாம்.
இது குறித்து லியாமன் கூறுகையில்,"வீரர்கள் பந்துவீசும் முறை, "பேட்' பிடிக்கும் விதம் போன்றவற்றை கண்டறிய வேண்டும். இதற்கு "ஹாக்-ஐ' தொழில்நுட்பம் உதவும். வீசப்படும் பந்துகளை பல்வேறு வகையாக பிரிக்கிறோம். இதனை பேட்ஸ்மேன்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை "வீடியோ' ஆதாரங்களுடன் ஆய்வு செய்கிறோம். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பந்துவீசும் போது நெருக்கடி ஏற்படும். இந்த பலவீனத்தை அறிந்து அந்த இடத்தில் ஒரு ஓவரில் இரு முறை பந்துவீசினால், எளிதாக விக்கெட்டை கைப்பற்றி விடலாம். இந்திய வீரர்களில் சச்சினுக்கு எதிராக இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிக் காட்டினோம். இவருக்கு எதிராக இங்கிலாந்து "வேகங்கள்' அபாரமாக பந்துவீசினர்,''என்றார்.


கவாஸ்கர் கிண்டல்
இங்கிலாந்தின் திட்டத்தில் புதுமை ஒன்றும் இல்லை என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில்,"" ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு விதமான "பேட்டிங்' "ஸ்டைல்' இருக்கும். "பேட்' பிடிக்கும் விதத்தை பொறுத்து இது அமையும். உதாரணமாக கங்குலி பயன்படுத்தும் பேட்டின் பிடி அதிக எடை கொண்டதாக இருக்கும். இது "ஆப்-சைடில்' விளையாட எளிதாக இருக்கும். சச்சினை எடுத்துக் கொண்டால் "பேட்' பிடிக்கும் பகுதி உருண்டை வடிவில் இருக்கும். இதன் மூலம் "ஆன்-சைடில்' எளிதாக ரன் சேர்க்கலாம். எனவே, சச்சின் "பேட்டிங்' பற்றி புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை,''என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...