|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

ஸ்பெக்ட்ரம் இழப்பு 1.76 லட்சம் கோடி என்பதை நிரூபிக்கத் தயார் வினோத் ராய்!


 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பின் மதிப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்பதை நிரூபிக்கத் தயார் என மத்திய தலைமைத் தணிக்கையாளர் வினோத் ராய் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கூட்டு நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டு நாடாளுமன்றக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு இம்மாதம் 10-ம் தேதி வினோத் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், எப்பொழுது எனது உதவி தேவைப்பட்டாலும் அதிகாரிகளுடன் ஆஜராகத் தயார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு இழப்பை மதிப்பீடு செய்த விதம் குறித்து விளக்கமளிக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்க நியாயமான அனைத்து முயற்சிகளையும் தனது அதிகாரிகள் மேற்கொண்டதாக கடிதத்தில் ராய் கூறியுள்ளார். கடைசியாக மே 30-ம் தேதி கூட்டு நாடாளுமன்றக் குழு முன்பு வினோத் ராய் ஆஜராகியிருந்தார். அப்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான தனது தணிக்கை அறிக்கை பற்றி எடுத்துக் கூறினார். 

இதனிடையே திங்கள்கிழமை (அக்டோபர் 31) வினோத் ராயும் மத்திய துணைத் தலைமைத் தணிக்கையாளர் ரேகா குப்தாவும் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு முன்பு விளக்கமளிக்க உள்ளனர். அப்போது, ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது எவ்வாறு என்பதை அவர்கள் விளக்குவார்கள்.அதேநேரத்தில்,அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு தணிக்கைத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ஆர்.பி. சிங், ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். அவர், ரூ. 2,645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார். அவரும் திங்கள்கிழமை பொதுக் கணக்குக் குழுக் கூட்டத்துக்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் நிருபம் கோரியதன் பேரில், சாட்சியாக ஆர்.பி. சிங் அழைக்கப்பட்டுள்ளார்.தொலைத் தொடர்புத் துறை, அமைச்சரவைச் செயலகம், நிதி அமைச்சர், சட்ட அமைச்சர், தொழில்துறை அமைச்சர், திட்டக் குழு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக உள்ள அனைத்து பொருத்தமான தகவல்களையும் தருமாறு கேட்டு கடிதம் அனுப்ப கூட்டு நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...