|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

பெற்ற தாயின் வயிற்றை வாளால் கிழிப்பது போல சேர்த்த பணத்தை காக்க கழகத்தை காட்டிக் கொடுக்க...?


நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. நமது கழகத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கல் ஆகிய பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அந்தப் பணிகளை நீங்கள் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறீர்கள். என்னென்ன விமர்சனங்கள்? எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? "குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமில்லை! சீராட்டும் பாராட்டும் பெறாமல் "சீ'' என்றிகழப்பட்டு, தெருப்புழுதியிலே சேர்க்கப்பட்டுவிடும்.

சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை. அதையொட்டி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இடைத்தேர்தலிலோ வித்தியாசம் இரு மடங்காகி விட்டது. என்றெல்லாம் கூறி மாடகூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண்டு, "வீழ்ந்தது கழகம், இனி எழவே முடியாது'' என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர். கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். 

கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர். துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் 62 ஆண்டு கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் தேர்ப்படையிலோ, யானைப் படையிலோ, புரவிப்படையிலோ இடம்பெற்று அந்தக் களத்திற்கு வரவில்லை. தன்னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத்திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.

அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு. யானை வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான். விரைவில் நெருங்கி விடுவான். பளிச்செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு. கோணிய வாளை எடுத்தான் - அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். அவனது வளைந்து போன வாளை நிமிர்த்திக் கொண்டான் என்பதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம் - புறங்காட்டி ஓடுகின்ற அவனைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங்கினான்.

ஓரம்போகியார் சித்தரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை - நமது கழகத்தை - நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலைகுலையச் செய்ய யத்தனிக்கலாம். நமது புறநானூற்றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதிரிப்படையை விரட்டியது போல, கொல்ல வரும் பகையை - தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும்.நாம் வெற்றியினைப் பெற்றிட உழைப்போம் - ஒற்றுமையோடு உழைப்போம் - ஓய்வில்லாமல் உழைப்போம் - உறுதியோடு உழைப்போம். கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம். உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம். புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...