மாநிலம் முழுவதும் இரண்டு லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக
உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், முன்னாள் கணித
பேராசிரியர் ஈடுபட்டுள்ளார். இந்திய வரைபடத்தில் பசுமையாக காணப்பட்ட தமிழகம், தற்போது பசுமை இழந்து
காணப்படுகிறது. இந்தியா முழுவதும் வனத்தையும், வன விலங்கினத்தையும்,
மரங்களையும் காக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு துரித நடவடிக்கையில்
இறங்கி வருகின்றனர். வனங்களை பாதுகாக்க இளைஞர் சமுதாயத்தை ஒன்றிணைக்கும்
முயற்சியில், கணித பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டு வருவது,
வனத்துறையிருக்கும், மக்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த கணித பேராசிரியரும், கவுரவ வன உயிரின
காப்பாளருமான கந்தசாமி கூறியதாவது:வனங்களும், மலைகளும், நதிகளும், நம்
மக்களுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள். ஆனால், தற்போது நதிகள் அனைத்து
செத்துவிட்டன. குற்றுயிரும், குலை உயிருமாக உள்ள வனங்களையும், மலைகளையும்
பாதுகாக்க நம் மக்கள் அனைவருமே ஒன்றுபட வேண்டும். தற்போதைய சூழலில், இளைஞர்
சக்தி ஒன்றிணைந்தால், வனங்களையும், விலங்கினங்களையும் மீட்டெடுக்க
முடியும்.கடந்த, 1985ல் மத்திய அரசின் திட்டத்தின் கீழ்,
பேராசிரியர்களுக்கு வனங்களை காக்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சார்ந்தவர்கள் கலந்து கொண்ட முகாமில், கணித
பேராசிரியரான நான் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யப்பட வைத்தது.
முகாமின் போது, வனம், மலைகளின் பெருமை குறித்து அறிந்ததால், அதனை மேலும்
அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்தது. அன்று முதல் இன்று வரை வனத்தையும்,
விலங்கினத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.ஈரோடு மாவட்ட
வனத்துறையின் துணையோடு, மாணவ, மாணவியருக்கு, காடுகள், விலங்குகள், மலைகள்
குறித்து கற்பித்து வருகிறேன். கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், முதுமலை,
ஊட்டி நேஷனல் பார்க், முக்கூர்த்தி, ஆனைமலை காடுகள், கொடைக்கானல் உள்ளிட்ட
காடுகளுக்கு, மாணவர்களை அழைத்து சென்று, வனக்கல்வியை அளித்துள்ளேன்.இதுவரை
இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்களுக்கு, வனக்கல்வியை கற்று
கொடுத்தேன். இவர்களை வனங்களை காக்கும் பசுமை போராளிகளாக மாற்றியுள்ளேன்.
வனங்கள், விலங்குகளை காப்பது குறித்த விழிப்புணர்வை இவர்கள் மாநிலம்
முழுவதும் பரப்பி வருகின்றனர்.வனங்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற,
இன்னும் பல லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக மாற்ற வேண்டும் என்பதே என்
லட்சியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment