|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

31 October, 2011

உறவுகளை அதிகரிக்கும் உன்னத சிரிப்பு!


சிரிப்பு நல்ல மருந்து என்று கூறுவார்கள். அதேபோல உடல் மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றமைக்கு யோகாசனம் உதவுகின்றது. சிரிப்பு, யோகாசனம் இரண்டையும் கலந்து ஆக்கப்பட்டு இருக்கின்ற பயிற்சி நெறிதான் சிரிப்பு யோகா.1995 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. உலகின் 60 நாடுகளில் நிலைபெற்று உள்ளது.


வியட்நாம் சிரிப்பு யோகா: குறிப்பாக வியட்னாம் நாட்டில் இது மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகிழ்ச்சி, நோயெதிர்ப்பு சக்தி, அமைதி ஆகியவற்றை நாளாந்த வாழ்வில் பெற்றுத் தரும் என்று வியட்னாம் மக்கள் நம்புகின்றனர். மாஸ்டர் லீ ஆன் சென் இன் வழிகாட்டலில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக தலைநகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஒவ்வொரு நாள் காலையும் 45 நிமிடங்கள் வரை பயிற்சி பெறுகின்றனர். சிரிப்பு யோகாவானது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நட்பின் ஆழத்தை அதிகரிக்கச்செய்கிறது. ஒருவருக்கொருவர் பார்த்து புன்னகைத்துக்கொள்ளுங்கள் என்று வியட்நாம் நாட்டில் சிரிப்பு யோகாவை அறிமுகம் செய்த லீ ஆன் சென் குறிப்பிட்டுள்ளார்.



ஒரு நோயின் கதை: நாம் சிரிக்கும் போது மூளையில் வெளிப்படும் வேதி பொருட்களுக்கு என்டார்பின்கள் என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாகவும் பயன்படுகின்றன. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீனமாக்கும் “ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்” என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் உட்காருவதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.


அதைப்பற்றி கவலைப்படாத கசின்ஸ் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, நகைச்சுவை படங்களாக பார்த்தார். மீண்டும் மீண்டும் அந்த படங்களைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. இந்த அற்புதமான அனுபவத்தை அவர் ஒரு நோயின் கதை என்ற நூலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன.

எண்டார்பின்களானது மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்டவை. இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால் புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள்.

வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் பலரும் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும் என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது.இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.


நோய் எதிர்ப்பு சக்தி: ஆண்களைவிட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும் அமைதியும் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். புன்னகையும், சிரிப்பும் நோய், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றது. எனவே சுயமாக சிரிக்க முடியாவிட்டால் மருந்தாக நினைத்து கஷ்டப்பட்டாவது சிரியுங்கள். அது உங்கள் உடலுக்கு நல்லது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...