சென்னை தி.நகரில் உள்ள 61 சிறிய மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்து
மூடி விட்டனர். இதனால் இந்த நிறுவனங்களில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பெரும் கவலையுடன் கடைகளுக்கு முன்பு கூடி நிற்கின்றனர். சென்னை
தி.நகரில் உஸ்மான் சாலையிலும், ரங்கநாதன் தெருவிலும் பெருமளவில் வர்த்தக
நிறுவனங்கள் உள்ளன. சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ்
உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இவற்றில் முக்கியமானவை.
இன்று காலை
தி.நகருக்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், மாநகராட்சி
அதிகாரிகள் சரவணா ஸ்டோர்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை, ரத்னா
ஸ்டோர்ஸின் 3 கடைகள், காதிம்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 61 வர்த்தக
நிறுவனங்களைப் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சீல் வைக்கும் பணிக்காக பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புக்காக
குவிக்கப்பட்டிருந்தனர்.
ஏன் சீல்? முறையான
கட்டட வரைபட அனுமதி இல்லாமல் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யப்படாதது,
தீயணைப்பு வாகனங்கள் சென்று வர வசதியில்லாத இடங்களில் பல அடுக்கு மாடிக்
கட்டடங்களைக் கட்டியது, பல்வேறு விதிமுறை மீ்றல்கள், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட
பல்வேறு காரணங்களுக்காக இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே பலமுறை நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகளும் பெருமளவில் தொடரப்பட்டிருந்தன.
பல்வேறு
நோட்டீஸ்களுக்குப் பிறகும் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்
எடுக்கவில்லை என்பதால் தற்போது சீல் வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள்
மேற்கொண்டுள்ளனர். தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாகவே சீல் வைக்கும்
நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மக்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக காத்திருந்து
இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீல் வைக்க மக்கள் அமோக ஆதரவு!!
உயிருக்கு சற்றும் உத்தரவாதமே இல்லாத மகா நெருக்கடியான இடத்தில் கடை
போட்டுள்ள சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஜவுளிக் கடைகள்,
பாத்திரக் கடைகளை மூ்ட மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.நகரில்
இன்று எங்கு திரும்பினாலும் ஒரே பரபரப்புதான். காரணம், சரவணா ஸ்டோர்ஸ்,
ஜெயச்சந்திரன், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பெரும் பெரும் வர்த்தக
நிறுவனங்களை இழுத்துப் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்ததே. இந்த
நடவடிக்கைக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. அத்தனை பேரும் இந்த
நடவடிக்கையை ஏன் இத்தனை லேட்டாக எடுத்துள்ளனர் என்ற ஒரே கேள்வியைத்தான்
வியப்புடன் கேட்கின்றனர். இந்த மூடல் நடவடிக்கைக்கு ஆதரவு ஏன் என்று மக்களிடம் கேட்டால் அவர்கள் குமுறித் தள்ளி விட்டனர்.
ரங்கநாதன்
தெருவையே நாறடித்து நடக்கக் கூட முடியாத நிலைக்குத் தள்ளியவை இந்த பெரும்
பெரும் கடைகள்தான். இந்த கடைகளால்தான் ரங்கநாதன் தெருவே இன்று பாதுகாப்பாக
நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் ரங்கநாதன் தெருவில்
மகா நிம்மதியாக மக்கள் நடமாட முடிந்தது. ஆனால் எப்போது இந்தக் கடைகள்
எல்லாம் பெருகினவோ அன்றைக்கே இந்த தெரு நாஸ்தியாகி விட்டது.
எந்தவிதமான
அடிப்படை வசதிகளும் இந்த பல அடுக்கு மாடிக் கட்டடங்களில் இல்லை. உயிருக்கு
உத்தரவாதம் கிடையாது. கடைக்குள் போய் விட்டால் திரும்ப பத்திரமாக திரும்பி
வருவோமா என்ற அச்சத்துடன்தான் மக்கள் போக வேண்டியுள்ளது. உரிய
தீயணைப்பு வசதிகள், பாதுகாப்பாக வெளியேற்றக் கூடிய வசதிகள், வாகனங்களை
நிறுத்தக் கூடிய வசதிகள் கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே ரங்கநாதன்
தெருவில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையில் நடந்த தீவிபத்தில் 2 பேர் கருகி
உயிரிழந்தனர். காரணம், பாதுகாப்பாக அவர்களால் வெளியேற முடியாததால்தான்.
மேலும் தீயணைப்பு வாகனங்களும் கூட கடைக்கு அருகில் வரக் கூட கடுமையாக
சிரமப்பட்டன.
இப்படி எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த
நிறுவனங்களில் கிடையாது. மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் ஊழியர்களாலும்
மக்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். வருகின்ற வாடிக்கையாளர்களிடம்
மரியாதைக்குறைவாக பேசுவது, நடப்பது, திட்டுவது, தாக்குவது என பல சம்பவங்கள்
பலமுறை நடந்துள்ளன. இதுதொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் பல
வழக்குகளும் பதிவாகியுள்ளன. அத்தனை சம்பவத்திலும் பணத்தைக் கொடுத்து
சரிக்கட்டி விடுவது இத்தகைய நிறுவனங்களின் வாடிக்கையாக உள்ளது. மேலும்
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையும் படு மோசம். அவர்களை
கொத்தடிமைகள் போலத்தான் நடத்துகின்றனர். இதுகுறித்து ஒரு சினிமாப் படமே
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிறுவனங்கள், வெறும்
பணத்தை மட்டுமே கண்ணாகக் கொண்டு,மக்கள் பாதுகாப்பு, கெளரவான ஷாப்பிங்
ஆகியவற்றைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் நடந்து இத்தனை காலமாக பணத்தை
வாரியிறைத்து வந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ஒரு நடவடிக்கையும்
எடுக்கப்படட்டதில்லை.
இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை போதாது. மாறாக
ரங்கநாதன் தெருவிலேயே உள்ள பாதுகாப்பு அம்சங்கள் சிறிதும் இல்லாமல்
நடத்தப்படும் பல கடைகளை மூட வேண்டும். குறிப்பாக பெரிய பெரிய கடைகளை
மூடுவது மிகவும் அவசியமானது. இரும்புக் கரத்துடன் எந்தவிதமான பாரபட்சமும்
இல்லாமல் நடவடிக்கை எடுத்தால்தான் இனிமேலாவது வாடிக்கையாளர்கள் எந்தவித
அச்சமும், பயமும் இன்றி நிம்மதியாக கடைகளுக்கு வந்து போக முடியும்.மக்களால்
புலம்பத்தான் முடிகிறது. ஆனால் அதைப் புரிந்து கொண்டு அரசாங்கமே கடுமையான
நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோன்ற நிறுவனங்களின் கொட்டத்தை அடக்க முடியும்
என்று புலம்புகின்றனர் மக்கள்.
மேலும், மக்களும் கூட இதுபோன்ற
பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிறுவனங்களுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும்,
அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள் என்றும் அவர்கள் தங்களுக்குத்
தாங்களே அறிவுரை கூறியதையும் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் இன்றைய
அதிரடி நடவடிக்கைக்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்திருப்பதால்
அதிகாரிகள் அப்படியே கண் துடைப்பு நடவடிக்கையாக இல்லாமல், இறுக்கமாக நடந்து
கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நிறுவனங்களை
திருத்தும் வகையில் நடவடிக்கையை ஸ்திரமாக்க வேண்டும் என்றும் மக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
ரங்கநாதன் தெருவில் அனைத்துக் கடைகளும் மூடல்: இதற்கிடையே,
சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து
ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இன்று
காலை சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கடைகளை அதிகாரிகள் அதிரடியாக
மூடியதைத் தொடர்ந்து மூடப்படாத பிற கடைகளையும் கடைக்காரர்களே இன்று
முற்பகலுக்கு மேல் மூடி விட்டனர். இதனால் ரங்கநாதன் தெருவில் வர்த்தகம்
முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.அதேபோல தெற்கு மற்றும் வடக்கு உஸ்மான் சாலையிலும் பல கடைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் 50 கடைகளுக்கு விரைவில் மூடு விழா: இதற்கிடையே,
பாதுகாப்பு வசதிகள், விதி மீறல்களில் ஈடுபட்டுள்ள மேலும் 50 கடைகளை மூடி
சீல் வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தக் கடைகள்
இன்றைக்குள் அல்லது நாளைக்குள் மூடப்படக் கூடும் என்று
எதிர்பார்க்கப்படுவதால் தி.நகரே பரபரப்பாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment