உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என
எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது. முன்னதாக
உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும்,
அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம்
தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான
அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும்
தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.
மணிலாவில்
உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது.
இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர்.
இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில்
பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத்
தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.
குழந்தையின் தாயாரான
கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக
உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே
முடியவில்லை என்றார் பூரிப்புடன்.
2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.குழந்தை
பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து
முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும்
வழங்கி வாழ்த்தினராம்.
மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த
பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின்
எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம்
அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை
வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின்போது
இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச்
சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த
மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித்
தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.
இதுகுறித்து குவரா கூறுகையில்,
இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே
ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும்
நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி. உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது! இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.பக்பத்
மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி
சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும்,
பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற
பெருமையைப் பெறுகின்றன.
No comments:
Post a Comment