|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 October, 2011

காங்.- 3வது இடமும் பறிபோனது!


காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட இடங்களில் பெரும்பாலானவற்றில் டெபாசிட்டைப் பறி கொடுக்கும் நிலையில் உள்ளது. 'கை' விட்டு எண்ணும் அளவுக்கு அதன் வெற்றி மிக மிக சொற்ப அளவில் உள்ளது. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியவில்லை இந்த தேசியக் கட்சியால். திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாவது தப்பித் தவறி வந்து சேர்ந்து விடும். ஆனால் திக்குத் தெரியாத நிலையில் காங்கிரஸ் பரிதாபமாக காட்சி தருகிறது.

இந்த்த தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். வேண்டுமானால் மற்றவர்கள் எங்களிடம் வரட்டு்ம் என்று வீரவசனம் பேசிய தங்கபாலு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி பேசுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. வாய்க்கு வாய் திமுகவையும், அதிமுகவையும் வாரிப் பேசுவதையே பொழுது போக்காக வைத்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் இனி என்னத்தைப் பேசுவார் என்பதும தெரியவில்லை.

இதுதான் காங்கிரஸின் உண்மையான நிலை,இத்தனை காலமும் அது ஓசி சவாரி செய்து செய்தே பழக்கப்பட்டுவிட்டதால் உண்மையான பலத்தை இப்போதுதான் அக்கட்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விட்டனர் தமிழக மக்கள். இதற்கு மேலும் காங்கிரஸ் வீர வசனம் பேசுவது என்பது சற்றும் நியாயமானதாக இருக்க முடியாது என்ற அளவுக்கு கேவலமான தோல்வியை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். இன்னும் சற்று காரமாக சொல்வதானால், மரண அடி என்று கூறலாம்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை அத்தனை பேரும் கைவிட்டு விட்டனர். ஏன் அக்கட்சியின் மேலிடமே கைவிட்டு விட்டது. இதனால் தவித்துப் போன காங்கிரஸ் தேமுதிகவை கூட்டணிக்குச் சேர்க்கலாமா என்று முயற்சித்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்தனர்.

ஆனால் தேர்தல் முடிவுகள் மகா கேவலமாக உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு காங்கிரஸின் செயல்பாடுகள் உள்ளன. பெரிய அளவில் எதையுமே கைப்பற்றவில்லை காங்கிரஸ். சென்னையில் ஒரு வார்டு கவுன்சிலரைக் கூடப் பெற முடியவில்லை இந்தக் கட்சியால். ஒரு நகராட்சித் தலைவர் பதவி கூட கிடைக்கவில்லை காங்கிரஸுக்கு. கடந்த சட்டசபைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்குடன் காணப்பட்ட காங்கிரஸுக்கு இந்தமுறை முட்டையைத்தான் மக்கள் பரிசாக அளித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக இருந்து வந்த காங்கிரஸ் தற்போது அந்த இடத்தையும் தேமுதிகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. தேமுதிகவுக்கு அடுத்த நிலையி்ல்தான் தற்போது காங்கிரஸ் வந்துள்ளது.மொத்தத்தில் இத்தனை காலமாக இத்தனை சதவீதம் வாக்குகள் உள்ளது, தமிழகத்தின் 3வது பெரிய கட்சி என்று பேசிப் பேசிய ஓசி சவாரி செய்து உழைக்காமல் பிழைத்து வந்த காங்கிரஸின் சுயரூபம் வெளுத்து விட்டது. இனிமேல்தான் இக்கட்சி பெரும் பெரும் சவால்களை சந்திக்கப் போகிறது என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...