எரிசக்தி மற்றும் தண்ணீர் தேவை, 12வது ஐந்தாண்டு திட்டத்தில் நாம்
எதிர்நோக்கும் மிகப் பெரிய சவாலாக இருக்கும்,'' என, மத்திய திட்ட கமிஷன்
துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா பேசினார். இந்திய பட்டய கணக்காளர்
நிறுவனத்தின் தென்மண்டல மையம் சார்பில், இந்நிறுவனத்தின் முன்னாள்
உறுப்பினரும், ராஜ்சபா எம்.பி., மணிசங்கர் அய்யரின் தந்தையுமான, சங்கர்
அய்யரின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று
நடந்தது.
நிகழ்ச்சியில், "ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான பொருளாதார
சீர்திருத்தம்' எனும் தலைப்பில், மத்திய திட்ட கமிஷன் துணைத் தலைவர்
மாண்டேக் சிங் அலுவாலியா பேசியதாவது: பெட்ரோல், டீசல், மின்சாரம் உள்ளிட்ட
எரிசக்தி தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, கச்சா
எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றை அதிகளவு இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், உள்நாட்டு சந்தையில், டீசல், சமையல் காஸ், மின்சாரம் போன்றவற்றை
நாம் இன்னும் மானிய விலையிலேயே தந்து வருகிறோம். பல மாநிலங்கள், மின்
கட்டணத்தை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. இதனால், ஏற்படும் பொருளாதார இழப்பை
சரிசெய்ய, கச்சா எண்ணெய், நிலக்கரி இறக்குமதியை குறைப்பதற்கான மாற்று
வழிகளை யோசிக்க வேண்டும். மக்கள் தொகை அதிகரித்துள்ள அளவிற்கு, நம்
நாட்டின் நீராதாரங்கள் கூடவில்லை. விவசாயம் மற்றும் குடிநீர்
உள்ளிட்டவற்றுக்கான தண்ணீர் தேவையை, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு
போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்பட
வேண்டும். தற்போது நகர்புறங்களில், 38 கோடியாக உள்ள மக்கள் தொகை, அடுத்த 20
ஆண்டுகளில் 60 கோடியாக உயர வாய்ப்புள்ளது. இதற்கேற்ப நகர்புற
உள்கட்டமைப்புகளை மேம்படுத்த, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல்
அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவ்வமைப்புகள், தங்களுக்கான நிதி ஆதாரங்களை,
சுயசார்புடன் அதிகரித்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு மற்றும்
ஊட்டச்சத்து குறைவு, பேறுகால இறப்பு விகிதம் போன்றவை குறித்த நடப்பாண்டு
புள்ளி விவரங்கள் இருந்தால் தான், இவற்றை குறைப்பதற்கு கொண்டு வரப்பட்ட
திட்டங்களின் பயன்கள் பற்றிய உண்மை நிலை தெரியவரும். இவ்வாறு மாண்டேக்சிங்
அலுவாலியா பேசினார்.
No comments:
Post a Comment