முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான டெண்டரில்,
"ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனமே குறைந்த தொகையை குறிப்பிட்டுள்ளதால்,
தொகை நிர்ணயிப்பது பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.புதிய திட்ட டெண்டர் : புதிய திட்டத்தின்படி, ஒரு குடும்பம்,
ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளில் நான்கு லட்சம்
ரூபாய் மதிப்புக்கு, நிர்ணயிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்
கொள்ளலாம். இதற்கான டெண்டர், கடந்த ஜூலை 20ம் தேதி வெளியிடப்பட்டது.
டெண்டருக்கான கடைசி நாளான, ஆக., 22ம் தேதி, பல நிறுவனங்கள் பங்கேற்ற
நிலையில், குறைந்தபட்ச விலையை, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தான்
குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம், ஆண்டுக்கு ஒரு
குடும்பத்துக்கு, 510 ரூபாய் வீதம் பிரீமியம் செலுத்த வேண்டுமென
குறிப்பிட்டுள்ளது. இதற்கு அடுத்த குறைந்தபட்ச தொகையாக 514 ரூபாயை,
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தொகை, அதிகமாக உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே, ஸ்டார் ஹெல்த்
நிறுவனத்திடமும், இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களிடமும், விலை நிர்ணயம் குறித்து
அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பேரங்கள் நடக்கிறதா? : தமிழகத்தில், நான்கு ஆண்டுகளில் ஒரு
குடும்பத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்புக்கு சிகிச்சை அளிக்க
வேண்டுமென்பதால், மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் குறைந்த விலையை பிரிமியமாக
நிர்ணயிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. தற்போதுள்ள நிலையில், புதிய
மருத்துவ காப்பீடு திட்டத்தை, ஸ்டார் ஹெல்த் நிறுவனம் வசமே ஒப்படைக்க
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்டார் நிறுவனம் குறைந்த தொகையை
குறிப்பிட்டிருந்தாலும், வேறு "பேரங்கள்' பற்றி தான் பேச்சுவார்த்தை
நடப்பதாக கூறப்படுகிறது. வெறும் பிரிமியத் தொகை பற்றிய பேரம் என்றால்,
ஒன்றிரண்டு வாரங்களில் பேசி முடித்திருக்க முடியும். ஆனால், ஆகஸ்ட் 22ம்
தேதி டெண்டர் முடிந்த நிலையில், இரண்டு மாதமாக பேரம் நடத்தப்படுவதால், வேறு
விவகாரம் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே நிறுவனத்திடம் கொடுப்பதா? : இது போன்று பேரங்கள்
நடக்கும் போது, சரியான சேவை மக்களை சென்றடையாத நிலை ஏற்படுகிறது. ஒரு
நிறுவனத்துக்கு மட்டும் அனைத்து காப்பீடுகளையும் வழங்காமல், இரண்டு மூன்று
நிறுவனங்களுக்கு பிரித்து வழங்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது, என்று
அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவ்வாறு பிரித்து வழங்கினால், விலை
இன்னும் அதிகரிக்கும் என்பதால், ஒரே நிறுவனத்திற்கு ஒப்பந்தம்
அளிக்கப்பட்டதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""பிரிமியம்
தொகையை, மொத்த மக்கள் தொகை அளவை கணக்கிட்டு தான் நிறுவனங்கள்
நிர்ணயிக்கின்றன. ஒரு கோடி குடும்பங்களுக்கு காப்பீடு செய்தால், அதில்
எவ்வளவு தொகை செலவாகும் என்று கணக்கிடுகின்றன. பழைய அனுபவத்தை வைத்து,
சராசரியாக எவ்வளவு தொகை காப்பீடு மூலம் செலவாகியுள்ளது என்பதை கணக்கிட்டு
நிர்ணயிக்கின்றன. எனவே, இரண்டு மூன்று நிறுவனங்களுக்கு வழங்கினால், அவை
பிரிமியம் தொகையை இன்னும் உயர்த்தும்,'' என்றார். கடந்த ஆட்சியிலேயே, இதே நிறுவனத்திற்கு மட்டும் ஒப்பந்தம்
அளிக்கப்பட்டு, சேவை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. இத்தகைய நிலையை தவிர்க்க, மேலும் சில
நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தால், சற்று கூடுதல் செலவானாலும், ஊழலை
தவிர்ப்பதோடு, மக்களுக்கு சீரான சேவை சென்றடைய வழிவகை செய்ய முடியும்.
No comments:
Post a Comment