மத்திய அமைச்சரவையில் இப்போதைக்கு தங்களது கட்சி சார்பில் யாரையும் சேர்க்க வேண்டாம் என்று திமுக முடிவுசெய்துள்ளது. திமுக
சார்பில் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசாவும்,
தயாநிதி மாறனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி பதவியை ராஜிநாமா செய்ய
நேரிட்டது. முன்னதாக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பேசிய பிரதமர்,
திமுகவுக்கான அமைச்சரவை இடங்கள் அப்படியே உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இப்போது
2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் சட்டரீதியாக
போராடுவதற்கும், கட்சியை வலுப்படுத்துவதற்கும்தான் முக்கியத்துவம் தர
வேண்டும் என்று அக்கட்சி தலைமை தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக
தலைவர் கருணாநிதியின் தற்போதைய பிரதான கவலை எல்லாம் கனிமொழிக்கு ஜாமீன்
கிடைக்க வேண்டும் என்பதுதான். எனவேதான் அமைச்சரவையில் திமுக சார்பில் வேறு
யாரையும் சேர்க்க அவர் ஆர்வம் காட்டவில்லை என்று கட்சியினர்
தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இப்போது அமைச்சரவையில்
யாரையேனும் சேர்த்தால் அது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று சித்தரிக்கப்படும்
என்றும் திமுக தலைமை கருதுகிறது. மேலும் தற்போதுள்ள நிலையில் அனைத்து
தரப்பினரையும் திருப்திபடுத்தக்கூடிய வகையில் ஒருவரைக் கண்டுபிடிப்பதும்
சிரமமான ஒன்று என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே திமுக சார்பில் தற்போதைக்கு மத்திய அமைச்சரவையில் யாரும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment