|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2011

தீபாவளியின் சிறப்பு!

தன் தாயாலேயே கொல்லப்பட்ட நரகாசுரன் இறந்த நாளான நரக சதுர்த்திதான் தீபாவளி. இவன் இறந்த நாளைத்தான் நாம்  சந்தோஷத்திருநாளான தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். மகன் நரகாசுரன் மறைந்தான் என்பது வருத்தத்தைத் தந்தாலும் அதனை வெளிப்படுத்தாமல், மற்றவர்கள் சந்தோஷமாக பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என வரம் கேட்டாள் மண்மாதா. நாம் வருந்தினாலும் பிறரை வருந்தச் செய்யக்கூடாது சந்தோஷமாக சிரித்து மகிழ வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தை உருவாக்கும் பண்டிகை தீபாவளி. பொறுமையின் சிகரமான பூ மாதா நமக்கு உணர்த்திய பாடம்தான் தீபாவளியின் உட்பொருள். ஒரு சமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில் அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்த வன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது 



எல்லாருக்கும் பல தொல்லைகளைக் கொடுத்த நரகாசுரனை வதம் செய்ய எண்ணி திருமால் தேரில் வரும்போது, தன்னுடன் சத்யபாமாவையும் அழைத்து வந்தார். போரின் உச்சகட்டத்தில் திருமால் மயங்கியதுபோல் நடிக்க, சத்யபாமா அம்பெய்தி நரகாசுரனைக் கொன்றாள். அப்போது அவளுக்கு, பூர்வஜென்மத்தில் தான் பூமிதேவியாக இருக்கும்போது பிறந்தவனே இந்த நரகாசுரன் என்பதும்; அவன் பெற்ற வரத்தின்படியே தாயான தன் கையாலே இறந்துவிட்டான் என்பதும் நினைவுக்கு வந்தது. அவன் இறந்த நாளை மக்கள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடையுடன் இனிப்பு சாப்பிட்டு கொண்டாட வேண்டும் என்றும்; அன்று மட்டும் கங்கை எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்க வேண்டும் என்றும் திருமாலிடம் வரம் பெற்றாள். அதைத்தான் நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு நரக படலம், அகால மரணம், கோர மரணம், நோய் ஏற்படாது. எனவேதான் அவள் அப்படி வரம் பெற்றாள். தீபாவளியன்று சூரிய உதயத்திற்குமுன் ஒரு முகூர்த்த நேரம் கங்கை உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் ஆவிர்பவிப்பாள். அன்று நாம் எங்கிருந்து குளித்தாலும் அது கங்கா ஸ்நானம்தான்.கண்ணபிரான் தன் சக்ராயுதத்தால் நரகாசுரன் கோட்டை கொத்தளங்களைப் பிளந்தபோது எழுந்த ஓசையை எதிரொலிப்பதற்காகவே வெடிச் சத்தத்துடன் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஐதிகம்.நரகாசுரனை வதம் செய்ய திருமால் புறப்பட்டபோது, அசுரர்கள் லட்சுமியைக் கவர்ந்து செல்ல கங்கணம் கட்டினர். லட்சுமி சூட்சும ரூபம் எடுத்து (மறை உரு) ஒளிர்ந்து கொண்டிருக்கும் தீபத்தில் இணைந்தாள். அதனால் அன்றைய தினத்தில் தீபத்தையும் தைலத்தையும் லட்சுமி சொரூபமாய் கொண்டாடுகின்றனர். ஆக நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல. நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான். 



தீப லக்ஷ்மி: நாராயணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டதும் நரகாசுரனின் நண்பர்களான சில அசுரர்கள் பரந்தாமனை பழிவாங்க நினைத்தார்கள். திருமாலும் பூமாதேவியும் போர்க்களம் போய்விட்டதால் திருமகள் மட்டும் வைகுண்டத்தில் தனித்து இருப்பதை அறிந்த அசுரர்கள் அவளைக் கடத்தி வர நினைத்து அங்கே போனார்கள். அசுரர்கள் வருவதை உணர்ந்த மகாலக்ஷ்மி சட்டென்று தீபமொன்றில் ஜோதியாக மாறி பிரகாசித்தாள். தீப வடிவமாக இருந்த ஜோதிலக்ஷ்மியை உணர முடியாததால் ஏமாற்றத்தோடு திரும்பிப்போனார்கள் அசுரர்கள். திருமகள் தீபமகளாகத் திருவடிவம் கொண்ட தினம் என்பதால்தான் தீபாவளியன்று தீபங்களை ஏற்றி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பர். தீப வடிவில் தீப லக்ஷ்மி நம் வீட்டிலும் நிலைபெற்று வாழ்வை பிரகாசிக்கச் செய்வாள் என்பது ஐதிகம்.


காசியில் தீபாவளி: காசியில் உள்ளோர் கங்கையில் நீராடி அன்னபூரணியை வணங்குவர். அன்று அன்னபூரணியை தங்கமயமாக- முழுமையாகத் தரிசிக்கலாம். அன்று இரவு லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னபூரணி வலம் வருவாள். பவனி முடிந்ததும் அந்த லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். தங்கத்தாலான கால பைரவரும் அன்றைய தினத்தில் மட்டுமே வீதியுலா வருவார்.


காசியில் தீபாவளி- அன்ன லிங்கம்: இது தென்னாட்டவர்களால் நடத்தப்படுகிறது. தீபாவளி யன்று காலை 10.00 மணிக்கு கங்கைக்கரை ஓரத்தில் தரையை சுத்தப்படுத்தி கோல மிட்டு, மிகப் பெரிய வாழை இலைகளைப் பரவலாக வைப்பர். இலையின்மீது மூன்றுக்கு மூன்று சதுர அடிப்பரப்பில் இரண்டு அடி உயரத்தில் சுத்த அன்னத்தால் லிங்கப் பிரதிஷ்டை செய்வர். அதற்கு விபூதி குங்குமம் வைத்து, மலர் மாலையிட்டு ருத்ராட்ச மாலையும் சாற்றுவர். அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடையால் அலங்காரம் செய்வர். நந்தியையும் அன்னத்தால் செய்து எதிரே வைப்பர். பச்சை மிளகாயால் நந்திக்கு காது, வாய் வைத்து, புளியங்கொட்டையால் கண் வைத்து அலங்கரிப்பார்கள். 11.00 மணியளவில் யாத்ரீகர்கள் முன்னிலையில் கணபதி பூஜையுடன் வடை, பாயசத்துடன் பூஜை முடிப்பார்கள். சுமார் 200 பிச்சைக்காரர்களுக்கு அந்த லிங்கத்தின் அன்னத்தாலே அன்னதானம் செய்வர். இலைக்கு 31 ரூபாய் தட்சணையும் தருவார்கள். ஆரம்பத்தில் பிராமணர்களுக்கு செய்தனர்; இப்போது பிச்சைக்காரர்களை அமரவைத்து விருந்து படைக்கிறார்கள். காசியில் மீராகாட் என்ற இடத்தில்தான் இது நடக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...