மாமன்னர் ராஜராஜனின் 1026 வது சதய விழா வரும் நவ.4, 5 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் பெரியகோவிலில் நடைபெறவுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழமன்னன் ராஜ ராஜ சோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தார் என்று கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி செய்து போர்களில் வெற்றி பெற்ற மாமன்னன் ராஜராஜனுக்கு மும்முடிச்சோழன் என்ற பெயரும் உண்டு. தஞ்சையில் சிறப்பு வாய்ந்த பெரிய கோவிலை கட்டியதன் வாயிலாக தமிழர்களின் பெருமையை உலகறியச்செய்த மன்னன் ராஜராஜன். அறுபதாயிரம் யானைப்படையும், ஒரு லட்சம் குதிரைப் படையும், ஒன்றரை லட்சம் காலாட்படையும், ஆகியவற்றை உள்ளடக்கிய வலிமையான இராணுவத்தை கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இந்தியாவின் முதற் கப்பற்படை அமைத்து கடல் கடந்து நாடுகளை வென்ற பெருமைக்குரிய மன்னன் ராஜராஜன். தஞ்சை, உறையூர் மற்றும் காஞ்சி மூன்று தலைநகரையும் கொண்ட தமிழ் நாட்டை அமைத்ததால் மும்முடிச்சோழன் என்ற சிறப்பு வாய்ந்த பெயரால் அழைக்கப்பட்டவன். இத்தகைய பெருமைக்குரிய மாமன்னனின் 1026 வது சதயவிழா நவம்பர் 4,5-ம் தேதிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகள்: சதயவிழாவை ஒட்டி இரண்டு நாட்களும் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், வழக்காடு மன்றம், பட்டிமன்றம், நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அன்றைய தினத்தில் மாமன்னன் ராஜராஜனின் சிறப்புகளை விளக்கும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் விழாவில் வழங்கப்படவுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment