|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

ஆரோக்கியத்திற்கு மூலிகை டீ!


காலையில் எழும்போதே காபி, அல்லது டீயின் முகத்தில் விழிப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். காபியோ, டீயோ எதுவென்றாலும் இன்றைக்கு சுத்தமானதாக இருப்பதில்லை. காசு செலவாவதோடு கலப்படத் தூளினை காய்ச்சி குடிப்பதால் உடல்நலம்தான் சீர்கேடு அடைகிறது. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

செம்பருத்திப்பூ: மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டிகாசன் போல வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.

ஆவாரம்பூ: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.

மாம்பூ: மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும். நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.

துளசி இலை: சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.

கொத்தமல்லி தழை: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்

புதினா இலை: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கொய்யா இலை: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...