|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கின் இறுதி விசாரணையை இம்மாதம் 22 – ம் தேதிக்கு!

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கின் இறுதி விசாரணையை இம்மாதம் 22 – ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. சார்க் மாநாட்டில் டக்ளஸ் தேவானந்த பங்கேற்ற புகைப்படத்துடன் மனுதாரர் வழக்கறிஞர் உயர்நீதி மன்ற பெஞ்ச் முன்பு சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்ததை அடுத்து நீதிபதிகள் இறுதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தேடப்படும் குற்றவாளி: இலங்கையின் பாரம்பரியத் தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. கடந்த 1986 மற்றும் 87ம் ஆண்டுகளில் இவர், சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு காவல் நிலையத்தில், திருநாவுக்கரசு என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கும், 7 வயது சிறுவனை கடத்தி, பணம் கேட்ட வழக்கு உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகின்றன. இதில், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரரின் வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன், நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர் கொண்ட பெஞ்சில், சிறப்பு கவன ஈர்ப்பை வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார்.

தேடப்படும் குற்றவாளி: அதில், ’’ஐகோர்ட்டில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாலத்தீவில் நவ., 10ம் தேதியன்று நடந்த சார்க் மாநாட்டில், இந்திய பிரதமரை சந்தித்து, தமிழகத்தின் மீனவர் பிரச்னை உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்ததாக, புகைப்படத்துடன் செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் குறித்து, பிரதமருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இந்திய பிரதமர் அவரை சந்தித்திருக்கலாம். ஆனால், தேடப்படும் குற்றவாளி, சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். எனவே, அவரை விசாரணைக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறினர். இதையடுத்து, நீதிபதிகள் நாகப்பா, சுதந்திரம் ஆகியோர், வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...