நாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல்
விலையை அடிக்கடி உயர்த்தி வரும் நிலையில், நஷ்டம் ஏற்படுவதாக
அந்நிறுவனங்கள் சொல்வது உண்மை தானா என்ற சந்தேகம், மக்கள் மத்தியில்
கிளம்பியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத்
பெட்ரோலியம் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை
இறக்குமதி செய்து, நாடு முழுவதும் விற்பனை செய்கின்றன.ரூ.319 கோடி நஷ்டம்:
பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்நிறுவனங்கள், தங்கள் விருப்பத்திற்கு
ஏற்ப உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் விளைவாக,
கடந்த 2010 ஜனவரியிலிருந்து, இதுவரை 14 முறை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டுள்ளது."உலகச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வே, விலை
உயர்விற்கு காரணம்' எனக் கூறும் இந்நிறுவனங்கள், தற்போது, ஒரு லிட்டர்
டீசலுக்கு, 6.61 ரூபாயும், ரேஷன் மண்ணெண்ணெய்க்கு, 24.63 ரூபாயும், வீட்டு
சிலிண்டர் ஒன்றுக்கு 270 ரூபாயும் நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.
அரசு வழங்கும் மானியத்தையும் மீறி, நாளொன்றுக்கு, 319 கோடி ரூபாய்
நஷ்டம் ஏற்படுவதாக அறிவித்துள்ளன.கடந்த 2008ம் ஆண்டு, பேரல் ஒன்றிற்கு
கச்சா எண்ணெய், 105 டாலராக இருந்த போது, பெட்ரோல் விலை 49 ரூபாயாக
இருந்தது. பின், கச்சா எண்ணெய் விலை குறைந்தது. 2009ம் ஆண்டில், சராசரியாக,
69 டாலருக்கு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலையில்,
பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை
படிப்படியாக உயர்த்திய வண்ணம் உள்ளன. 2008ல், 49 ரூபாயாக இருந்த பெட்ரோல்
விலை, தற்போது 72 ரூபாய்க்கு வந்துள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு: எண்ணெய் நிறுவனங்கள் சொல்வதில் உண்மை இல்லை எனக்
கூறி, கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை
விசாரித்த நீதிபதிகள், எண்ணெய் நிறுவனங்களின் ஆண்டு வரவு - செலவு கணக்கை,
கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி கூறியுள்ளனர்.இதற்கிடையே, பெட்ரோலியப்
பொருட்களை அதிகளவில் கையாளும் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்,
தணிக்கை செய்யப்படாத, 2011ம் ஆண்டு, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான,
மூன்று மாத வரவு - செலவு கணக்கு விவரத்தை, நேற்று வெளியிட்டுள்ளது. அதில்,
மேல் குறிப்பிட்ட காலாண்டில் 7,485 கோடி ரூபாய், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. இது கோர்ட் உத்தரவை சமாளிக்கும் நடவடிக்கையாகத் தெரிகிறது. ஏனெனில்,
மூன்று பெரிய பெட்ரோலிய நிறுவனங்களுமே, கடந்த மார்ச் வரையிலான, 2010 -
2011ம் நிதியாண்டில், லாபம் ஈட்டியிருப்பது, அந்த நிறுவனங்கள் தாக்கல்
செய்துள்ள வரவு-செலவு கணக்கு அறிக்கையின் மூலம் தெளிவாகிறது. மேலும்,
2009-2010ம் நிதியாண்டில், மேல் குறிப்பிட்டுள்ள காலாண்டிற்கும், தணிக்கை
செய்யாத கணக்கையே வெளியிட்டுள்ளது. அதில், அந்த காலகட்டத்தில், லாபம்
வந்துள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது.அதாவது, கடந்த ஆண்டு லாபம்
வந்ததாகவும், இந்த ஆண்டு எண்ணெய் விலை கச்சா உயர்வு காரணமாக நஷ்டம்
வருவதாகவும் காண்பித்துள்ளது. நஷ்டம் ஏற்படுவதாக தொடர்ந்து தணிக்கை
செய்யப்படாத கணக்கு மூலம் கூறி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது,
மக்களை ஏமாற்றும் வேலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment