|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 November, 2011

இந்திய புவியியல் துறை!


மாணவர் பருவத்தில், குறிப்பாக பள்ளி பருவத்தில், புவியியல் மீதான ஆர்வம் அனைவருக்கும் இருக்கும். தமது நாட்டை, மாநிலத்தை, மாவட்டத்தை, ஏன் நகரம் அல்லது கிராமத்தை தேடிக் கண்டுபிடித்து பார்த்து சந்தோஷப்படுதல், அந்த வயதின் ஆனந்தங்களுள் ஒன்று. இதுதவிர, மலைகள், நதிகள், பாலைவனங்கள் மற்றும் பனிப் பிரதேசங்கள் ஆகியவற்றையும் மாணவர்கள் விரும்பிப் பார்ப்பர். நம் நாட்டைத் தாண்டிய அல்லது கண்டத்தை தாண்டிய பிறிதொரு நிலப்பரப்பு எவ்வாறு இருக்கும்? அப்பகுதி மக்கள் எப்படி இருப்பார்கள்? அவைகளை எப்படி சென்றடைவது? என்பன குறித்த ஆர்வம், புவியியலின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை. கி.மு.9ம் நூற்றாண்டில்தான், முதல் வரைபடம்(Map) உருவாக்கப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கடல் பயண கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பலவித நடவடிக்கைகளுக்கு, வரைபடங்களை பயன்படுத்த தொடங்கிய காலம் முதல், புவியியல் துறை முக்கிய வளர்ச்சியைக் கண்டது. புவியியல் துறையின் நவீன வடிவங்களாக, பூகோள தகவல் அமைப்பு(Geographic Information system), நகர் திட்டமிடுதல் மற்றும் பருவநிலை அறிவியல் போன்றவை திகழ்கின்றன.

பழைய வரலாறு: சீனம், அரபு தேசம், கிரேக்கம், ரோம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தத்துவஞானிகள், கணிதவியலாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோர், ஆரம்பகால புவியியல் துறை வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளார்கள். கி.மு.3ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் எரடோஸ்தனிஸ், Geography என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் மற்றும் புவியின் சுற்றளவை முதன்முதலில் அளந்தவர் என்று வரலாறு கூறுகிறது. அதேசமயம், கி.மு.7ம் நூற்றாண்டில், காலிபாக்களின் வாள் வலிமையால் இஸ்லாமிய பேரரசு பரவத்தொடங்கிய காலகட்டத்தில், அம்மதத்தின் அறிஞர்கள், பயணிகள் மற்றும் வணிகர்கள், உலகின் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்கள் மற்றும் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்கள். இடைக்காலங்களில், ஐரோப்பியர்கள் இத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினாலும், ஆட்டோமன் துருக்கியர்கள் கி.பி.1453ம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள்(Byzantium) நகரை கைப்பற்றியப் பிறகு, ஐரோப்பியர்கள், ஆசியர்களுடன் மேற்கொண்டிருந்த பாரம்பரிய வணிக வழி தடைபட்டதால், கடல்வழியாக புதிய வழியை கண்டுபிடிக்க ஐரோப்பியர்கள்(1492 முதல்) தொடங்கியபோது, இத்துறை அபாரமான வளர்ச்சியைக் கண்டது. புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், உலகை வரைபடமிடுதல் கலை மேம்படத் தொடங்கியது. ஐரோப்பிய பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, புவியியல் ஒரு பாடமாக 19ம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய பல்கலைகளிலோ, கடந்த 1930களில் ஒரு பாடமாக புவியியல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கடந்துபோன ஆண்டுகளில், புவியியல் பாடம் என்பது பலவித சுற்றுச்சூழல் நிலைகள், இடங்கள், புவிஅமைப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புகள் பற்றி படிப்பது என்ற அளவில் புவியியல் துறை ஒரு கருத்தமைப்பை பெற்றுள்ளது.

இன்றைய நிலை: இன்றைய தொழில்புரட்சி யுகத்தில், புவியியல் என்ற துறையின் வளர்ச்சியை ஆய்ந்து நோக்க வேண்டியுள்ளது. சமநிலையற்ற வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி, நகர்மயமாக்கல், பருவநிலை மாற்றம் போன்ற பலவித அம்சங்களை ஆய்வுசெய்ய புவியியல் பயன்படுகிறது. புவியியல் என்பது விவரணம் என்ற நிலையிலிருந்து பகுப்பாய்வு என்ற நிலைக்கு தன்மை மாற்றம் அடைந்துள்ளது.

அறிவியலுக்கும், சமூகத்திற்கும் இடையில்: ஒரு பிரச்சினையை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியாக அலசுவது எந்தளவு முக்கியமோ, அதேஅளவிற்கு, புவியியல் ரீதியாக அலசுவதும் மிகவும் முக்கியம். ஏனெனில், புவியியலின் முக்கியத்துவம் அந்தளவிற்கானது. சமூக அறிவியலையும், பெளதீக அறிவியலையும் இணைக்கும் முக்கியப் பகுதி புவியியலில் அடங்கியுள்ளது.புவியியல் துறை தனக்குள் பலவித அம்சங்களைக் கொண்டுள்ளதால், திட்டமிடுதல், இயற்கை வளங்களை சுரண்டுதல், சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சிறப்பு பகுப்பாய்வு போன்றவைகளில் அதன் பங்களிப்பு உண்டு. புவி மற்றும் சுற்றுச்சூழல் குறித்து தரவுகளை உருவாக்க ரிமோட் சென்சிங் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது, இத்துறையின் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

புவியியலில் உயர்கல்வி: இந்தத்துறை, பெளதீக ரீதியான புவியியல்(Physical Geography) மற்றும் மனித சம்பந்தப்பட்ட புவியியல்(Human Geography) என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெளதீக ரீதியான புவியியல் என்பது, பூமியின் அடுக்குகள், சுற்றுச்சூழல், மண் மற்றும் விலங்குகள் - பறவைகள் பற்றி புரிந்துகொள்ள உதவுகிறது. முக்கியமாக, பாறை அமைப்புகள் மற்றும் புவியின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியது. பெளதீக புவியியல் என்பது பெருமளவில் கணக்கீட்டு முறையை சார்ந்துள்ளது. மனித புவியியல் என்பது மனிதனுக்கும், அவனது இயற்கைச் சூழலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து, அதன்மூலம், மனித சமூகங்களை வடிவமைக்கும் பரந்த சமூக அமைப்பு சாத்தியக்கூற்றை நிறுவுகிறது. மேலும், பொருளாதார மற்றும் சமூக புவியியலை ஒருங்கிணைத்து, அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடைய செயல்கள் மக்களையும், இடங்களையும் பாதிக்கின்றன என்ற அகப்பார்வையை படிப்பவருக்குத் தருகிறது. மனித புவியியலில், பெளதீக புவியியல் போலன்றி, தரநிலையிலான ஆராய்ச்சி முறைகள் பயன்படுகின்றன. (உ.ம்) பங்கேற்பவரின் கவனம் மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை)

ஒட்டுமொத்த கருத்தாக்கங்கள்: பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை, புவியியல் என்பது சமூக அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது தனிப் பாடமாகவோ கற்பிக்கப்படுகிறது. மேல்நிலை பாடத்தில் புவியியலை தேர்வு செய்யாத மாணவர்கள்கூட, கல்லூரி நிலையில் அப்பாடத்தை தேர்வு செய்யலாம். அதேசமயம், பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதம் மற்றும் உயிரியல் படித்திருந்தால், அந்த மாணவருக்கு, மேல்படிப்பு நிலையில், புவியியலின் நுட்பங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என்று ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...