சாதாரண சிங்களக் குடிமகனையோ, ஏன் அரசியல்வாதிகளைக் கூட மரியாதையில்லாத வார்த்தைகளால் விமர்சிக்கவில்லை. அரசியல்வாதிகள் சுயநலமாக நடந்துள்ளார்கள் என்பதே எனது எண்ணத்தில் ஆழமாக உள்ளது. அதனால், இப்பிரச்னையில் நான் தீர்வாக கருதுவதை இங்கு சமர்ப்பிக்க விழைகிறேன். இலங்கையில் தமிழ் - சிங்களர் மக்களிடையே உள்ள மிக அடிப்படையான பிரச்னை இரு இனங்களுக்குமிடையே உள்ள பரஸ்பர அவநம்பிக்கையே. மற்றயவை எல்லாம் அதிலிருந்து தோன்றியவையே.
தமிழர்கள் உயர்வடைந்தால் தாம் நசுக்கப்பட்டுவிடுவோம் என்ற எண்ணத்தை விதைத்து, அதற்கேற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொண்டே இலங்கையின் இரு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளான சிறீலங்கா சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் நடந்துள்ளன. இதன் விளைவாக எண்ணற்ற தொடர் நிகழ்வுகள் இலங்கையில் நடந்துள்ளன.
முன்னர் தமிழ் - சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையிலான பல ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டமை, இந்திய அரசின் உதவியோடு ஏற்படுத்தப்பட்ட தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கான அரசியல் சரத்து நீக்கப்பட்டமை, ஏன்.. பிரபாகரன் உள்பட புலி இயக்க தலைவர்கள் மட்டுமின்றி, அவர்களது மொத்தக் குடும்பமே அழிக்கப்பட்டதாக இலங்கை அரசே பிரகடனம் செய்தபின்பும் விடுதலைப் புலிகளின் அச்சுறத்தல் பற்றி ஓயாமல் புலம்பிக் கொண்டும், அதையே காரணமாகச் சொல்லி இன்று தமிழ்ப் பிரதேச மூலை முடுக்கெல்லாம் ராணுவம் நிலைகொண்டுள்ளமை எல்லாம் இந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடுகள்தாம்.
இவை எல்லாம் இந்திய மத்திய அரசின் உறுதியான உத்தரவாதம் தெரிவிக்கப்பட்ட பின்னரும் தொடர்கின்றன என்பதுதான் சோகமான செய்தி. ஒரு கட்டத்தில் தமிழகத் தலைவர்களின் ஓயாத அழுத்தங்களின்போது பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், "இன்னொரு நாட்டுக்குள் எமது ராணுவத்தை அனுப்ப முடியாது," என்று தெளிவாகவேச் சொல்லி இருந்தார். இந்த மாதம், அக்டோபர் 26-ம் தேதி இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் சிறப்புப் பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் பான் கி மூனை நியூயார்க் நகரில் சந்தித்திருந்தார். இலங்கை அரசு மீது சுமத்தப்படும் குற்றங்களை இட்டு தமது தரப்பு நியாயங்களை அவருக்கு எடுத்துரைத்தபோது, பான் கி மூன் பின்வரும் மூன்று விஷயங்களை உறுதியாகத் தெரிவித்தார்.
1. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு முயற்சி செய்ய வேண்டும்.
2. மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வு.
இதில் முதலாவதாக, இலங்கை அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதைத்தான் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நம்பிக்கையீனத்தை நீக்கி புரிந்துணர்வு வரச்செய்தல். இன்று மஹிந்த
ராஜபக்ஷே வல்லமை படைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக உள்ளார். அவருடைய சொல், சிங்கள மக்களிடையே செல்கிறது. அவரை சிங்கள மக்கள் நம்புகின்றனர். நாட்டை பாதுகாக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி, வளர்க்க அவர் சில செயல்களை முன்னெடுக்கவேண்டும். காலங்காலமாக தமிழ்த் தலைவர்கள் கேட்டு வந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக அமையவேண்டும்.
தமிழர் பகுதிகளான வடக்கு கிழக்குப் பகுதிகளை இணைத்த வடகிழக்கு மாநில பிராந்திய உள்ளாட்சிப் பகுதியை கௌரவமான அதிகாரங்களுடன் அமைய வழி செய்தல்.இலங்கையின் தமிழர்களின் பாரம்பரிய பகுதியான வட மாகாணத்தில் அரசு உதவியுடனான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல். மாறாக, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளித்து, அரசு உதவி இல்லாமல் சுயமாக சிங்கள குடிமகன் ஒருவர், தனது பொருளாதார சமூக மேம்பாட்டுக்காக தமிழ்ப் பகுதிகளில் நிலம் வாங்கி குடியேறும் நிலை உருவாக்கவேண்டும்.
ராணுவம் உட்பட நாட்டின் எந்தச் சேவையிலும், எப்பகுதியிலும் தமிழர்கள் அச்சமின்றி வேலைசெய்யும் வாய்ப்பும் நிலையும் உருவாக்கப்பட வேண்டும்.இனரீதியாக நாட்டில் எந்த முடிவுளோ, முன்னெடுப்புகளோ எடுக்கப்படவில்லை என்பது தமிழ் மக்களுக்கு உணர்த்தப்படுதல் வேண்டும்.முக்கியமாக, தமிழர்கள் அச்சப்படும்படியாகவோ, அவநம்பிக்கைப்படும்படியாகவோ இருக்காத வகையில் எந்த அரசியல் தலைவர்களும் தமது பேச்சு - செயல்களில் கவனமாக இருக்கவேண்டும். முதல்படியாக தம்மிடம் உதவி கோரி இருக்கும் பத்மநாதன் போன்ற புலித்தலைவர்கள் இருப்பதைக் காட்டியாவது, புலிகளைப் பற்றிய அச்சத்தை அகற்றவேண்டும்.
புத்தபிரான் பிறந்தது, இந்தியாவில் ஒரு இந்து மத அரச குடும்பத்தில். அவரின் போதனைகளில் இந்து மதத்தை பற்றி எக்குறையும் கூறவில்லை. எம்மதத்துக்கும் எதிரானவையாகவும் இல்லை. இந்துக் கோயில்களிலும், தெய்வங்களிலும் சிங்கள மக்கள் நம்பிக்கை உடையவர்கள். பலர் அங்கு சென்று வழிபாடு செய்வதுண்டு. இந்துக் கடவுள்கள் தான் வரம் கொடுப்பார்கள் என்று நம்புபவர்கள். இன்னும் பிள்ளையார் வழி பாடும் அம்மன் வழிபாடும் அவர்களிடமுண்டு. புத்த கோயில்களில் இத்தெய்வ சொரூபங்களைக் காணலாம். இதேபோல் தமிழ் மக்களும் புத்த கோயில்களில் பயபக்தியுடனேயே நடப்பார்கள். ஆனால் அரசோ இராணுவமோ "கைப்பற்றப்பட்ட" இடங்களில் புதிதாக புத்த கோயில்களை நிறுவுவது தமிழர்கள் திணிப்பாக கருதுகிறார்கள். இதனை மேற்கொள்ளுவது புத்தியீனமான செயலென்பதை உணர்ந்து கைவிடுதல் தமிழ் மக்களுக்கு மரியாதை கொடுப்பதாக அமையும். இரு இனங்களுக்குமிடையில் பரஸ்பர மதிப்பையும் உருவாக்கும்.
இவற்றுக்கு மேலாக நாட்டின் சமாதானத்துக்காகவும், அமைதிக்காகவும் இலங்கை அதிபருக்கு சர்வதேச சமூகத்தையும், கடல் கடந்த ஈழத் தமிழர் அமைப்புகளையும் சாந்தப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு. ராணுவச் செயல்பாடுகளில் வரம்பு மீறிய பல நிகழ்வுகள் இருப்பினும் புலிகளின் செயல்பாடுகளிலுள்ள நியாயப்படுத்த முடியாதவை இலங்கை அரசுக்கு சாதகமாகவே உள்ளது. நடக்கப்போவதைச் சொல்லி, செயலில் காட்டி, நடந்தவற்றை மறக்க, புறந்தள்ள செய்யவேண்டும். சுருங்கக் கூறின், மக்கள் தம் கலாசாரத்துடன் உரிமைகளை பெற்று நிம்மதியாக தமது நாடு என்று நினைத்து வாழ்க்கூடிய நிலைமை வேண்டும். இதனை ஏற்படுத்துமா இலங்கை அரசு? அதுவும் நடுக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலின் ஓட்டையை அடைக்கும் செயலுக்கு ஒத்த ஒரு போர்க்கால செயலாக?
பிரிட்டனில் இருந்தது நகுலேஸ்வரன். நன்றி.
No comments:
Post a Comment