வீடு வரை உறவு... வீதி வரை மனைவி'' என்றார் கண்ணதாசன். கணவரே இறந்துவிட்டால்கூட வீதி வரைதான் மனைவி. ஆனால், சாலை ஓரங்களில் கிடக்கும் சடலங்களையும் அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்றுக்கிடக்கும் அநாதைப் பிணங்களையும் மனித நேயத்துடன் நல்லடக்கம் செய்துவருகிறார்கள் சேலம் 'லைஃப் டிரஸ்ட்’ அமைப்பைச் சேர்ந்த பெண்கள்! லைஃப் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் தயாநிதி மாறன், ''நான் பள்ளி மாணவனா இருந்தப்ப அப்பா வுக்கு நெஞ்சு வலி வந்தது. உடனே, பாண்டிச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாதான் பிழைப்பார்னு சொல்லிட்டாங்க. ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி வண்டியும் வந்தது. ஆனா, எட்டாயிரம் பணம் கட்டினாத்தான் வண்டியை எடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அந்தத் தாமதத்துல அவர் இறந்தே போயிட்டார். அடக்கம் பண்ணக்கூட முடியாத அளவுக்கு வறுமை யில் வாடிய காலம் அது!''- என்று கண் கலங்கியவர், சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.
அப்பவே கஷ்டப்படுறவங்களுக்கு நம்மால முடிஞ்ச நல்லது செய்யணும்னு வைராக்கியம் உண்டாச்சு. படிச்சு முடிச்சு ஒரு நிலைமைக்கு வந்த உடனே, இந்த அமைப்பைத் துவக்கினேன். ஏகப்பட்ட பேர் பஸ்ஸ்டாண்டுலயும் சாலை ஓரத் துலயும் நிராதரவா கிடக்குறாங்க. அவங்க கிடைச்சதைச் சாப்பிட்டு வாழ்ந்து, வய சான பின்பு நடை தளர்ந்து, தவழக்கூட முடியாம முடங்கிக்கிடப்பாங்க. நாம அவங்களுக்கு காசு கொடுத்தாக்கூட அதை எடுத்துட்டுப் போய் சாப்பாடு வாங்கிச் சாப்பிடத் திராணி இருக்காது. அப்படி இருக்குறவங்களைத் தேடிப்பிடிச்சு நாங்க பராமரிக்கிறோம். அதேபோல, அநாதையா இறக்குற பலரது உடல் சீண்டுவார் இல்லாம கவர்மென்ட் ஆஸ்பத்திரிகளில் கிடக்குது. அந்த உடல்களை வாங்கி நல்லடக்கம் செய்யறோம். எங்கள் அமைப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். இயல்பாவே ஆண்களைவிடக் கருணை உள்ளம்கொண்டவங்க பெண்கள். கடந்த ஒன்றரை வருஷத்துல இதுவரை 198 அநாதை உடல்களை நல்லடக்கம் செஞ்சு இருக்கோம். ஆரம்பத்துல வசதி இல்லாம பாடையில் கட்டித் தூக்கிப் போயிட்டு இருந்தோம். அப்புறம் எங்க சேவையைப் பார்த்துட்டு, கருணை உள்ளம்கொண்ட சிலர் ஆம்புலன்ஸ் ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க!'' என்கிறார் நெகிழ்வுடன். இதன் ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, ''ஒவ்வொருத்தரும் வாழ்ற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கணும்ங்க. எங்க வாழ்க்கைக்கு நாங்க அர்த்தம் கற்பிச்சிக்கிட்டு வர்றோம். நாளைக்கே நான் இறந்தாக்கூட, வாழ்க்கையை முழுசா வாழ்ந்து முடிச்ச மன நிறைவோட ரொம்பவும் சந்தோஷமா கண்ணை மூடுவேன். ஆரம்பத்துல இறந்த உடல்களைத் தூக்கும்போது பயமா இருந்துச்சு. வீட்லயும் கடும் எதிர்ப்பு. இப்ப எல்லாம் சரியாப்போச்சு. இந்த அமைப்புல இருக்குற சுமார் 20 பெண்கள் படிச்ச, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். எந்த நேரம் கூப்பிட்டாலும் சிரமம் பார்க்காம இறுதிக் காரியத்துக்கு வந்துடுவாங்க!'' என்றார் கருணை மிளிர. ஊருக்குச் பலர் இவர்கள்போல வேண்டும்!
No comments:
Post a Comment