தவமாய் தவமிருந்து பிள்ளை பெற காத்திருக்கும் பெண்களை அதிகமாக கொண்ட நமது நாட்டில், பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட நினைக்கும் நவநாகரீக பெண்களும் அதிகரித்து வருகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் ஆசைப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. தற்போது பெண்கள் அதுவும் நகரவாசிகள் குழந்தை பெற்றுக் கொள்ளவே தயங்குகின்றனர். 'நாம் இருவர் நமக்கேன் இன்னும் ஒருவர்' என்ற புதுமொழியை உருவாக்கும் பெண்கள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டனராம். முன்பெல்லாம் குழந்தை பெறுவதில் கணக்கே இருக்காது. உடம்பு தாங்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வார்கள் அந்தக் காலத்துப் பெண்மணிகள். இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல குழந்தைகள் அன்று இருந்தனர். ஆனால் இன்று 'கூட்டமே' இல்லாத குடும்பங்கள்தான் அதிகமாக உள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்ள இந்தக் காலத்துப் பெண்கள் யோசிக்க, தயங்க பல காரணங்கள். வேலைக்குப் போகும் பெண்களாக இன்றைய மகளிர் அதிகளவில் இருப்பதால் வேலைக்கும் போய்க் கொண்டு குழந்தையையும் பார்த்துக் கொள்ள சிரமப்படுகின்றனர். குழந்தை பெற்றால் எடை அதிகரித்து அழகு போய் விடும். உடல் தளர்ந்து விடும், உடல் கட்டு குலைந்து விடும். குழந்தைக்காகவே முழு நேரத்தையும் செலவிட வேண்டும். நினைத்தப்படி நினைத்த இடத்திற்கு எல்லாம் செல்ல முடியாது. கணவரை முன்பு போல் கவனிக்க முடியாது. இதெல்லாம் குழந்தை பெறத் தயங்கும் பெண்கள் கூறும் சில காரணங்கள். கஷ்டப்பட்டு உழைத்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுத்திருப்போம். பதவி உயர்வு கிடைக்கும் நேரத்தில் பிரசவ லீவு போட்டால் பதவி உயர்வு போய் விடும். இப்படிப் பல காரணங்களை வைத்திருக்கிறார்கள் இந்தப் 'பிள்ளை விரும்பா' பெண்கள். இதனால் வேலைக்குப் போகும் பெண்கள் முடிந்த அளவுக்கு குழந்தை பெறுவதை தள்ளிப்போடுகின்றனர். உனக்கு கல்யாணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டதே, குழந்தை பெறும் எண்ணமே இல்லையா என்றால், அதுக்கென்ன அவசரம், அப்புறம் பார்க்கலாம் என்கிறார்கள் பலர்.
நம் பாட்டிமார்கள் 12,13 குழந்தைகள் பெற்றனர். நம் அம்மாமார்கள் 2 முதல் 5 வரை பெற்றனர். தற்போதுள்ள தலைமுறை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்வது சுமையல்ல அதுவும் ஒரு சுகம் தான் என்பதை இந்தப் பெண்கள் உணர வேண்டும். தாய்மைப் பேறு என்பது எல்லோருக்கும் கிடைக்காதது. எத்தனையோ பெண்கள் குழந்தைப் பேறுக்கு வழியில்லாமல் மனதுக்குள் ஒடிந்து புழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேறு கிடைக்கும்போது அதை தட்டிக் கழிப்பது நிச்சயம் தவறு. காலம் போன பின்னர் குழந்தை குறித்து யோசித்து, அப்போது நமது உடல் அதற்கேற்ற தகுதியைத் தாண்டி போகும்போது வருத்தப்படுவதற்குப் பதில், முடிந்தவரை சீக்கிரமே ஒன்றோ அல்லது இரண்டோ பெற்றுக் கொண்டு முழுமை அடைவது புத்திசாலித்தனம் இல்லையா...?
No comments:
Post a Comment