திருமணமாகாத வாலிபர்களைக் குறி வைத்து நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ரேஞ்சுக்கு மயக்கும் வகையி்ல் பேசி பணமோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி பெண் அவரது கணவருடன் கைது செய்யப்பட்டார். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னை கமிஷனர் திரிபாதியிடம் எஸ்.எம்.எஸ். மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்தார். இது குறித்து விஜய் அளித்துள்ளபுகாரில் கூறியிருப்பதாவது, எனது செல்போன்னுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் பெயர் அகிலா. என்னை பற்றிய தகவல்களை பெற இணையதளத்தை பார்க்கவும் என்று கூறி குறிப்பிட்ட இணையதள முகவரி அனுப்பப்பட்டு இருந்தது. அந்த இணையதளத்தில் தகவல்களை பெற ரூ.2,000 கேட்டிருந்தனர். அதை நான் செலுத்தினேன். ஆனால் எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங், துணை கமிஷனர் ராதிகா ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர், இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் புதுச்சேரியைச் சேர்ந்த சித்ரா என்பவர் அவரது கணவர் வெங்கடேசனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. விஜய் உட்பட 4 வாலிபர்களிடம் இந்த தம்பதியர் பணமோசடியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
திருமண தகவல் மைய இணைய தளங்கள் மூலம் திருமணமாகாத வாலிபர்களின் மொபைல்போன் நம்பர்களை பெற்றிருக்கிறார் சித்ரா. அதில் சிலரை மொபைல்போனில் அழைப்பார். அப்போது திருமண தகவல் மைய இணையதளத்தில் உங்கள் விவரங்களை பார்த்தேன். உங்களுக்கு ஏற்ற துணையாக நான் இருப்பேன் என நினைக்கிறேன் என மயக்கும் குரலில் தெரிவிப்பார். இதில் மயங்கும் சிலர் சித்ரா அளிக்கும் இணையதள முகவரியில் சென்று பார்ப்பார்கள். ஆனால் தகவல்களை பெற கட்டணம் செலுத்துமாறு தெரிவிக்கப்படும். இதில் சிலர் கட்டணம் செலுத்தி ஏமாந்துள்ளது தெரிய வந்துள்ளது. சித்ராவையும், அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment