ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தை, எம்.பி.,க்களுக்கு வழங்க வேண்டும். அவர்களின் கார்களில், சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்த அனுமதிக்க வேண்டும்' என்பது உட்பட பல சலுகைகளை, அவர்களுக்கு வழங்க வேண்டும் என, லோக்சபா உரிமை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
கடந்த செவ்வாயன்று, பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத் தொடர் துவங்கியது. இதுவரை ஒரு நாள் கூட சபை முழுமையாக செயல்படவில்லை. பல்வேறு பிரச்னைகளால் அமளி, கூச்சல், குழப்பம் ஏற்பட்டு, சபைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், எம்.பி.,க்கள் யாரும், தங்களின் பணியை முழுமையாகச் செய்யவில்லை. இந்நிலையில், நேற்று லோக்சபா ஒத்திவைக்கப்படுவதற்கு முன், காங்கிரஸ் எம்.பி., சாக்கோ தலைமையிலான பார்லிமென்ட் உரிமைக் கமிட்டி, தன் பரிந்துரைகளை, சபையில் தாக்கல் செய்தது. அந்தப் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
*எம்.பி.,க்களின் கார்களில், சிவப்பு விளக்குகள் பொருத்த அனுமதிக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில், மத்திய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ், மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிக்கை வெளியிட வேண்டும்.
*அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், எம்.பி.,க்களுக்கான முக்கியத்துவம் தற்போது, 21ம் இடத்தில் உள்ளது. அதை 17 ஆக குறைக்க வேண்டும்.
*ஐகோர்ட் தலைமை நீதிபதிகளுக்கு இணையான அந்தஸ்தையும், உரிமையையும் எம்.பி.,க்களுக்கு வழங்க வேண்டும்.
*லோக்சபா முன்னாள் சபாநாயகர்களுக்கு, மத்திய கேபினட் அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும். அவர்களுக்குள்ள உரிமைகளை எங்களுக்கும் தர வேண்டும்.
*அதே நேரத்தில், அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியுடன் சேர்ந்து, லோக்சபா சபாநாயகருக்கும், 6வது இடம் வழங்க வேண்டும்.
*அரசின் வி.ஐ.பி.,க்கள் பட்டியலில், எம்.பி.,க்களின் இடத்தை, 17ஆக உயர்த்துவதன் மூலம், மாநில அமைச்சர்களுக்கு மேலான அந்தஸ்தை (அவர்களின் தரவரிசை 18) பெறுவர்.
*எம்.பி.,க்களை கையாளும் போது, மரியாதையற்ற வகையில், அவர்களை அதிகாரிகள் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
*மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில், அவ்வப்போது சுற்றறிக்கைகள் வினியோகிக்கப்படுகின்றன. அவை எல்லாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இவற்றை அரசு பொறுப்பில் உள்ளவர்களின் கவனத்திற்கும் அவ்வப்போது கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment